கொடைக்கானலில் மலர் கண்காட்சி

கொடைக்​கானல் பிரையன்ட் பூங்​கா​வில் 63-வது மலர் கண்​காட்சி நேற்று தொடங்​கியது. இதில், ஒரு லட்​சம் கார்​னேஷன், ரோஜா மலர்​களால் அமைக்​கப்​பட்ட பாம்​பன் பாலம், தஞ்சை பெரிய கோயில், ஜல்​லிக்​கட்டு ஆகியவை சுற்​றுலா பயணி​களை வெகு​வாக கவர்ந்​தன.

மலைகளின் இளவரசி’ என்​றழைக்​கப்​படும் கொடைக்​கானலில் ஆண்​டு​தோறும் மே மாதம் கோடை விழா மற்​றும் மலர் கண்​காட்சி நடத்தப்படுகிறது. தமிழகத்​தில் இன்​னும் துறை சார்ந்த அமைச்​சர் நியமிக்​கப்​ப​டாத​தால் இந்​தாண்டு மலர் கண்​காட்சி மற்​றும் கோடை விழாவுக்​கான தேதியை முடிவு செய்​வது, நிகழ்ச்​சிகளை ஏற்​பாடு செய்​வ​தில் தாமதம் ஏற்​பட்​டது.

இந்​நிலை​யில் திடீரென நேற்று (மே 20) 63-வது மலர் கண்​காட்சி தொடங்​கும் என முதல்​நாள் இரவு அறிவிக்​கப்​பட்​டு, நேற்று காலை கண்​காட்சி தொடங்​கியது. இதனை ஆட்​சி​யர் சரவணன் தொடங்கி வைத்​தார். கொடைக்​கானல் தோட்​டக்​கலைத் துறை துணை இயக்​குநர் சந்​திரக​வி​தா, கோட்​டாட்​சி​யர் கீர்த்​த​னா, மாவட்ட சுற்​றுலாஅலு​வலர் கோவிந்​த​ராஜ், மாவட்ட வன அலு​வலர் அரவிந்த்,நகராட்சி ஆணையர் சங்​கர் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

மலர் கண்​காட்​சி​யையொட்டி நடவு செய்​யப்​பட்​டிருந்த ரெனன்​குலஸ், கிளாக்​சினி​யா, ஹைப்​போயெஸ்​டெஸ், கோச்​சியா உள்​ளிட்ட 85 வகை​யான 6 லட்​சம் செடிகளில் மலர்​கள் பல வண்​ணங்​களில் பூத்​துக்​குலுங்​கிய​தால் பூங்கா முழு​வதும் வண்​ணமய​மாக காட்சி அளித்​தது.

பல வண்ண ரோஜாக்​களால் புவி​சார் குறி​யீடு பெற்ற திண்​டுக்​கல் பூட்டு நுழைவு வாயில் அமைக்​கப்​பட்​டிருந்​தது. கண்​காட்​சி​யின் சிறப்பு அம்​ச​மாக பாம்​பன் பாலம், தஞ்சை பெரிய கோயில், ஜல்​லிக்​கட்டு காளையை வீரர் அடக்​கு​வது, பன்​முக திறமை​யின் சின்​னம் ஆகியவை ஒரு லட்​சம் கார்​னேஷன், ரோஜா மலர்​களால் அமைக்​கப்​பட்​டிருந்​தது. பல்​வேறு அரசு துறை​கள் சார்​பில் 20-க்​கும் மேற்​பட்ட அரங்​கு​கள் அமைக்​கப்​பட்​டிருந்​தன.

12 நாட்​களுக்கு கண்​காட்சி நடை​பெறுகிறது. பார்​வை​யாளர்​கள் அனு​ம​திக்​கும் நேரம் காலை 8 முதல் இரவு 7 மணி வரை​ நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது. நுழைவுக் கட்​ட​ணம் பெரிய​வர்​களுக்கு ரூ. 80, சிறு​வர்​களுக்கு ரூ.50 ஆக அதி​கரிக்​கப்​பட்​டுள்ளது. இது சுற்​றுலா பயணிகளிடம் அதிருப்​தியை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

சுற்​றுலாத் துறை சார்​பில் நடத்​தப்​படும் கோடை விழாவை நாளை (மே 22) முதல் மே 31-ம்தேதி வரை நடத்த முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது. சென்ற ஆண்டை போல், இந்​தாண்​டும் பல்​வேறு கலை நிகழ்ச்​சிகள், விளை​யாட்​டுப் போட்​டிகள், படகு அலங்​காரப் போட்​டி, ‘பாரா செயி​லிங்’ எனும் பாராசூட் சாகச நிகழ்ச்​சி, ராட்சத காற்​றாடி திரு​விழா, நாய்​கள் கண்​காட்சி நடத்​த​வும் திட்​ட​மிட்​டுள்​ளனர். இதில் அமைச்​சர், அதி​காரி​கள், எம்​.பி. எம்​எல்ஏ மற்​றும் முக்​கியஸ்​தர்​களுக்கு அழைப்பு விடுக்​க​வும் முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது.