சிக்கலில் செந்தில் பாலாஜி… விசாரிக்க அனுமதி கேட்டு அமலாக்கத்துறை கடிதம்!

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான பண மோசடி வழக்கு தொடர்பாக அவரிடம் விசாரிக்க அனுமதி கோரி தமிழக அரசுக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முந்தைய திமுக ஆட்சியில் அனுமதி வழங்கப்படாத நிலையில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அமலாக்கத்துறை விசாரணைக்கு அனுமதி கோரியுள்ளது.வேலைக்கு பணம் பெற்ற மோசடி தொடர்பான வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரிக்க அனுமதி கோரி தமிழக அரசின் தலைமைச் செயலர் சாய் குமாருக்கு அமலாக்கத்துறை நேரடியாக கடிதம் எழுதியுள்ளது.செந்தில் பாலாஜியை விசாரிக்க முந்தைய திமுக ஆட்சியில் அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், அவரை விசாரிப்பதற்கான ஆதாரங்கள், ரகசிய குறிப்புகளுடன் அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

செந்தில் பாலாஜி போக்குவரத்து அமைச்சராக இருந்த 2011 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில், போக்குவரத்துத் துறையில் வேலைக்கு பணம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது. செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக் குமார் உள்ளிட்டோர் மீது பணமோசடி குற்றச்சாட்டின் பேரில் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்ததுடன், போக்குவரத்துத் துறையில் வேலை தேடும் விண்ணப்பதாரர்களிடமிருந்து சட்டவிரோதமாக லஞ்சம் பெற்றதாகவும் அவர்கள் மீது குற்றம் சாட்டியது.பண மோசடி வழக்கில் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக் குமார் உட்பட 4 பேர் மீது வழக்கு மாநில அரசு அனுமதி இல்லாததால் நீதிமன்ற விசாரணை இன்னும் தொடங்கவில்லை. செந்தில் பாலாஜியை மீண்டும் விசாரிக்க அனுமதி கேட்டு அமலாக்கத் துறை கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிரான ‘வேலைக்கு பணம்’ பெற்ற வழக்கில் அமலாக்கத்துறை வழக்குத் தொடர அனுமதி வழங்க மறுத்து ஏழு மாதங்கள் ஆன நிலையில், செந்தில் பாலாஜி மீது வழக்குத் தொடர மாநில அரசின் ஒப்புதலைக் கோரி, தலைமைச் செயலாளர் சாய் குமாருக்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளது.

மே 15 தேதியிட்ட மூன்று பக்க கடிதத்தில், அப்போதைய ஆளுநருக்கு அனுப்பப்பட்ட, முந்தைய வழக்குத் தொடர அனுமதி கோரிக்கை, மாநில அரசின் வழிகாட்டுதல்களின்படி இந்த ஆண்டு பிப்ரவரி 23 அன்று திருப்பி அனுப்பப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. ஒரு அரசு ஊழியர் மீது வழக்குத் தொடர அனுமதி வழங்க மாநில அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்றும், அமலாக்கத்துறை ஆளுநரை அணுகுவதற்குப் பதிலாக நேரடியாக தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதியிருக்க வேண்டும் என்றும் அப்போதைய தலைமைச் செயலாளர் அக்டோபர் 2025-ல் ஆளுநருக்குத் தெரிவித்திருந்தார்.தற்போது, அமலாக்கத்துறை தனது புதிய கடிதத்தில், தொடர்புடைய அனைத்து ஆதாரங்களையும், விசாரணை குறித்த ரகசியக் குறிப்பையும், வழக்குத் தரப்பு புகாரின் நகலையும் ஒரு பென் டிரைவில் இணைத்துள்ளது. இந்தத் தகவல், தலைமைச் செயலாளர் அலுவலகத்தால் முறையாகப் பெறப்பட்டு, அதற்கான ஒப்புகை பெறப்பட்டதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.