இவ்வளவு பெரிய டைனோசரா?- தென்கிழக்கு ஆசியாவில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்த அதிசயம்

சுமார் 120 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, இன்றைய வடகிழக்கு தாய்லாந்தின் ஆற்றுப்படுகைகளில் பூமி அதிர நடைபயின்ற பிரம்மாண்ட உயிரினம்.அதன் ஒரு காலடித் தடமே சிறிய குளமாக மாறக்கூடிய அளவு பெரிது, அப்படிப்பட்ட ஒரு ராட்சத டைனோசரின் கதையை இப்போது விஞ்ஞானிகள் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளனர். இது தென்கிழக்கு ஆசியாவிலேயே கண்டறியப்பட்ட மிகப்பெரிய டைனோசர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 சையாபும் மாகாணத்தில் உள்ள குளத்தின் கரையில், புதைபடிம வேட்டைக்காரர்கள் சிலர் தற்செயலாக பிரம்மாண்டமான எலும்புகளைக் கண்டனர். அந்த எலும்புகளின் அளவு அவர்களை வியப்பில் ஆழ்த்தியது. உடனே லண்டன் யுனிவர்சிட்டி காலேஜ் , தாய்லாந்தின் மகாசரகம் பல்கலைக்கழகம், சிரிந்தோர்ன் அருங்காட்சியகம் எனப் பல சர்வதேச அமைப்புகளின் விஞ்ஞானிகள் களத்தில் இறங்கினர். பத்து ஆண்டுகாலத் தீவிர ஆராய்ச்சி, அகழ்வாராய்ச்சி மற்றும் ஒப்பீட்டு ஆய்வுகளுக்குப் பிறகு, இப்போது ஒரு ‘மெகா’ செய்தியை வெளியிட்டுள்ளனர். அந்தப் பிரம்மாண்ட எலும்புகள் ஒரு புதிய வகை டைனோசருடையவை என்பதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தினர். அதற்கு அவர்கள் வைத்துள்ள பெயர் ‘நாகாடைட்டன் சையாபுமென்சிஸ்’

இதன் பிரம்மாண்டத்தை விவரிக்க விஞ்ஞானிகள் கொடுக்கும் அளவீடுகள் மலைக்க வைக்கின்றன. எடை சுமார் 27 டன்கள். அதாவது, 9 முழு ஆசிய யானைகளை ஒன்றாகச் சேர்த்தால் எவ்வளவு எடை இருக்குமோ, அவ்வளவு. நீளம் தலை முதல் வால் வரை சுமார் 27 மீட்டர்கள். இது ஒரு பிரம்மாண்ட நீலத் திமிங்கலத்தின் நீளத்திற்கு இணையானது. ஒரு கூடைப்பந்து மைதானத்தின் நீளத்திற்குச் சமம். இது நீண்ட கழுத்து மற்றும் நீண்ட வால் கொண்ட, ‘சாரோபாட்’ என்ற தாவர உண்ணி டைனோசர் வகையைச் சேர்ந்தது. லண்டனின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் உள்ள புகழ்பெற்ற ‘டிப்பி’  என்ற டைனோசரை விட, இந்த நாகாடைட்டன் 10 டன்கள் கூடுதல் எடை கொண்டது என்கிறார் இந்த ஆய்வின் முதன்மை ஆசிரியர் திதிவூட் செதபானிச்சகுல். ஆனால், உலகிலேயே மிகப்பெரிய டைனோசர்களான பட்டகோடைன் (60 டன்கள்) போன்றவற்றுடன் ஒப்பிடும்போது, இது சிறியதுதான் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
ஆராய்ச்சியாளர்கள் இந்த நாகாடைட்டனை ‘தாய்லாந்தின் கடைசி டைட்டன்’ என்று அழைக்கிறார்கள்.  இது கண்டறியப்பட்ட பாறை அடுக்குகள்தான் தாய்லாந்தில் டைனோசர்கள் வாழ்ந்த காலத்தின் இறுதிக்கட்டத்தைச் சேர்ந்தவை. இதற்குப் பிறகு இப்பகுதி கடலாக மாறிவிட்டதால், மீண்டும் இதைவிடப் பெரிய டைனோசர்கள் கிடைக்க வாய்ப்பில்லை என்று அவர்கள் கருதுகிறார்கள். இது ஒரு வகையில் ஒரு காலத்தின் இறுதிச் சாட்சியாக நிற்கிறது. இந்த ஆராய்ச்சி தாய்லாந்துக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தென்கிழக்கு ஆசியாவிற்கே பெருமை சேர்க்கும் ஒன்று. 10 ஆண்டுகளுக்கு முன்பு தற்செயலாகக் கண்டெடுக்கப்பட்ட எலும்புத் துண்டு, இன்று உலகின் மிகப்பெரிய டைனோசர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது, மனிதனின் தேடலுக்குக் கிடைத்த ஒரு மிகப்பெரிய வெற்றி.