கேரள காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களின் தலைவராக வி.டி.சதீஷன் நியமிக்கப்படுவதாக காங்கிரஸ் மேலிடம் அறிவித்துள்ளது. இதையடுத்து கேரள மாநிலத்தின் புதிய முதல்வராக வி.டி.சதீஷன் விரைவில் பொறுப்பேற்கவுள்ளார்.
கேரளாவில் கடந்த ஏப்ரல் 20-ம் தேதி சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து தேர்தல் முடிவுகள் கடந்த 4-ம் தேதி அறிவிக்கப்பட்டன. மொத்தமுள்ள 140 தொகுதிகளில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) 102 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கும் தகுதியைப் பெற்றது. இதையடுத்து, கேரளாவின் அடுத்த முதல்வரை தேர்வு செய்வதற்கான முயற்சிகளை காங்கிரஸ் கட்சி தீவிரப்படுத்தியது.இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மேலிட பார்வையாளர்களான அஜய் மக்கான் மற்றும் முகுல் வாஸ்னிக் ஆகியோர் கடந்த 7-ம் தேதி திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் கூட்டத்தைக் கூட்டி விரிவான ஆலோசனை நடத்தினர். இதனிடையே முதல்வர் பதவியைப் பெறுவதற்கு கட்சியின் மூத்த தலைவரும், சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த வி.டி.சதீஷன், கட்சியின் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா ஆகியோரிடையே கடும் போட்டி இருந்தது.







