ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் திடீர் இடமாற்றம்

மிழ்நாட்டின் 13வது முதலமைச்சராகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று முன்தினம் பதவியேற்றுக் கொண்டார்.

அவருக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனையடுத்து என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார், ராஜ்மோகன், கீர்த்தனா, பிரபு உள்ளிட்ட தவெக எம்.எல்.ஏக்கள் 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து தமிழக அரசியல் களத்தில் உள்ள மூத்த தலைவர்களை முதல்வர் விஜய் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார். இந்நிலையில் தமிழக அரசு இன்று மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. இதற்கான அரசாணையை தலைமைச் செயலாளர் சாய்குமார் வெளியிட்டுள்ளார். இந்த உத்தரவின்படி, கட்டாய விடுப்பில் இருந்து இருந்து திரும்பிய ந. முருகானந்தம், வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகத்தின் கூடுதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை இப்பதவியைக் கூடுதல் பொறுப்பாகக் கவனித்து வந்த பி. அமுதாவிற்குப் பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராகப் பணியாற்றி வந்த எம்.ஏ. சித்திக், நிதித்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். இவர் டி. உதயச்சந்திரன் ஐஏஎஸ் வகித்து வந்த இடத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல், ‘ரூசா’ திட்டத்தின் மாநிலத் திட்ட இயக்குநராக இருந்த ச. சுவர்ணா சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறையின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கே. மணிவாசனுக்குப் பதிலாக இந்தப் பொறுப்பை ஏற்க உள்ளார். மேலும், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக இருந்த கி. நந்தகுமார், டாஸ்மாக் நிறுவனத்தின் புதிய மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். அதாவது டி. கிறிஸ்துராஜ் வகித்து வந்த இந்த முக்கியமான பொறுப்பிற்கு நந்தகுமார் மாற்றப்பட்டுள்ளார். அதோடு அமுதா மற்றும் உதயசந்திரன் ஆகியோர் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.