ஆளுநர் முடிவு சட்டப்படி சரியா, தவறா?

தமிழகத்​தில் அதிக இடங்​களில் வெற்றி பெற்ற தவெக தலை​வர் விஜய்​யிடம் ஆளுநர் மாளி​கை​யிலேயே பெரும்​பான்​மையை நிரூபிக்​கக் கூறியது அரசி​யலமைப்பு சட்ட ரீதி​யாக சரி​யா, தவறா என சென்னை உயர் நீதி​மன்ற சட்ட நிபுணர்​கள் விளக்​கம் அளித்​துள்​ளனர்.

ஆட்சியமைக்க தவெகவுக்கு ஆளுநர் அழைப்பு விடுக்காத விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதி​மன்ற மூத்த வழக்​கறிஞர் அபுடு​கு​மார் ராஜரத்​தினம் கூறும்​போது, “பொது​வாக தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் ஒரு கட்சி தனிப்​பெரும்​பான்​மை​யுடன் வெற்றி பெற்​றுள்​ளது என்​றால் ஆளுநர் நேரடி​யாகவே அந்த கட்​சியை ஆட்​சி​யமைக்​கும்​படி அழைப்பு விடுப்​பார்.

தொங்கு சட்​டப்​பேரவை அமை​யும்​ போது கூட்​டணி ஆட்சி அல்​லது எந்த கட்சி அதிக இடங்​களில் வெற்றி பெற்​றுள்​ளதோ அந்த கட்சி தனது பெரும்​பான்​மையை நிரூபிக்க வேண்​டுமென அரசி​யலமைப்பு சட்ட பிரிவு​கள் 163 மற்​றும் 164 பிர​காரம் ஆளுநர் அழைப்பு விடுப்​பார்.அப்​படி அழைப்பு விடுக்​கும்​போது முதலில் அக்​கட்​சி​யின் சார்​பில் தேர்வு செய்​யப்​படும் தலை​வருக்கு தமிழக முதல்​வ​ராக ஆளுநர் பதவிப்​பிர​மாணம் செய்து வைப்​பார். பிறகு தற்​காலிக சட்​டப்​பேர​வைத் தலை​வர் தேர்வு செய்​யப்​பட்டு சட்​டப்​பேர​வை​யில் அனைத்து எம்​எல்​ஏ-க்​களும் பதவிப்​பிர​மாணம் எடுப்​பர்.அதன்​பிறகே அந்​தக் கட்​சிக்கு பெரும்​பான்மை பலம் இருக்​கிற​தா, இல்​லையா என்​பதை வாக்​கெடுப்பு முறை​யில் நிரூபிக்க வேண்​டும். இது​தான் எஸ்​.ஆர்​.பொம்மை வழக்​கில் உச்ச நீதி​மன்​றத்​தால் நிலை​நாட்​டப்​பட்ட சட்​டப்​பூர்வ வழி​முறை.

தவெக தற்​போது 108 இடங்​களில் வெற்றி பெற்று அதிக இடங்​களில் வெற்றி பெற்ற கட்​சி​யாக முதலிடத்​தில் உள்ளது. இந்​தச் சூழலில் ஆட்​சி​யமைக்க உரிமை கோரும்​போது விஜய் தனக்​கான பெரும்​பான்மை பலத்தை சட்​டப்​பேர​வை​யில் நிரூபித்​தால் போதும். அதை ஆளுநர் மாளி​கை​யில் வைத்து நிரூபித்​துக்​காட்ட வேண்​டிய அவசி​யமில்​லை. விஜய் 118 எம்​எல்​ஏ-க்​களின் ஆதரவை சட்​டப்​பேரவை தளத்​தில் நிரூபித்​துக்​காட்டி விட்​டால் அவர் முதல்​வ​ராக தொடர சட்ட ரீதி​யாக எந்த தடை​யும் இல்​லை. ஆனால் ஒரு​வேளை விஜய் தனது பலத்தை நிரூபிக்க முடி​யா​விட்​டால் அவரது தலை​மையி​லான ஆட்சி அரசி​யலமைப்பு சட்​டப்​பிரிவு 356 பிர​காரம் கலைக்​கப்​பட்​டு, தவெக-வுக்கு அடுத்​த​படி​யாக யார் பெரும்​பான்​மையை நிரூபிக்​கிறோம் எனக் கூறுகிறார்​களோ அவர்​களுக்கு ஆளுநர் அழைப்பு விடுக்க வேண்​டும்.தனக்​குரிய விருப்​புரிமை அடிப்​படை​யில் விஜய்யை முதலில் அழைக்க முடி​யாது என ஆளுநர் ஒரு​போதும் கூற முடி​யாது. அப்​படிக்​கூறி​னால் அது உச்ச நீதி​மன்ற தீர்ப்​புக்கு முரணானது” என்​றார்.

மத்​திய அரசு தரப்பு மூத்த வழக்​கறிஞர்​கள் கூறும்​போது, “தவெக தலை​வர் விஜய், அதிக இடங்​களில் வெற்றி பெற்​றுள்ள கட்சி என்ற அடிப்​படை​யில் தங்​களை ஆட்​சி​யமைக்க அழைக்க வேண்​டுமென ஆளுநரிடம் நேரடி​யாக உரிமை கோர​வில்​லை.அப்​படி கோரி​யிருந்​தால், இந்​நேரம் ஆளுநர் தவெக​வுக்கு அழைப்பு விடுத்​திருப்​பார். அவர்​களும் சட்​டப்​பேர​வை​யில் தங்​களது பெரும்​பான்​மையை நிரூபித்​துக் காட்​டி​யிருக்​கலாம். ஆனால், எடுத்த எடுப்​பிலேயே எங்​களிடம் 107 எம்​எல்​ஏ-க்​கள் உள்​ளனர்.

காங்​கிரஸ் கட்​சி​யின் 5 எம்​எல்​ஏ-க்​கள் எங்​களுக்கு ஆதரவு அளித்து கடிதம் அளித்​துள்​ளனர் எனக் கூறி கூட்​டணி ஆட்சி அமைக்​கிறோம் என ஆளுநரிடம் கூறியது​தான் சிக்​கல்.

காங்​கிரஸ் கட்​சி​யின் 5 எம்​எல்​ஏ-க்​களை​யும் சேர்த்​தால்​கூட ஆட்​சி​யமைக்க தேவை​யான 118 இடங்​கள் வரவில்​லையே என்​ப​தால் ஆளுநர் பெரும்​பான்​மையை முதலில் நிரூபி​யுங்​கள், அதன்​பிறகு அழைக்​கிறேன் எனக் கூறி தவெகவை அழைக்​க​வில்​லை.இந்த விஷ​யத்​தில் போதிய முன்​அனுபவ​மில்​லாமல் தவெக​வினர் தங்​களுக்​கான வாய்ப்பை கோட்டை விட்​டு​விட்​டு, ஆளுநரை குறை​கூறு​வது அர்த்​தமற்​றது” என்​றனர்.

ஜம்மு காஷ்மீர் உயர் நீதி​மன்ற முன்​னாள் தலைமை நீதிப​தி​யான என். பால்​வசந்​தகு​மார், தமிழகத்​தில் தவெக தவிர வேறு எந்​தக் கட்​சி​யும் ஆட்சி அமைக்க உரிமை கோராத நிலை​யில், தவெகவை ஆட்சி அமைக்​கும்​படி ஆளுநர் அழைக்​காமல் இருப்​பது ஜனநாயக சட்​ட​விரோதம், என கருத்து தெரி​வித்​துள்​ளார்.

இதே​போல தமிழ்​நாடு மற்​றும் புதுச்​சேரி பார்​ கவுன்​சில்​ உறுப்​பின​ரான வழக்​கறிஞர்​ எம்​.வேல்​முரு​கன்​ தமிழக ஆளுநரின்​ செயலுக்​கு கடும்​ கண்​டனம்​ தெரிவித்துள்ளார்.

தமிழகத்​தில் எந்​தக் கட்​சி​யும் 118 தொகு​தி​களை பெற்​றிருக்​க​வில்லை எனில் அரசி​யலமைப்பு சட்​டத்​தின் 4 வழி​முறை​களை பின்​பற்றி ஆளுநர் அழைப்பு விடுக்​கலாம்.

தேர்​தலுக்கு முன்பே அரசி​யல் கட்​சிகள் ஒன்​றாக சேர்ந்து கூட்​டணி அமைத்​திருந்​தால் அந்த கூட்​ட​ணியை அழைக்​கலாம்.

அதிக இடங்​களை கைப்​பற்​றி​யுள்ள கட்சி போதிய ஆதர​வுடன் இருந்​தால் அந்த கட்​சிக்கு அழைப்பு விடுக்​கலாம்.

தேர்​தல் முடிந்த பிறகு வெற்றி பெற்ற கட்​சிகள் தங்​களுக்​குள் கூட்​டணி அமைத்து இருந்​தால் அந்த கட்​சிகளை அழைக்​கலாம்.

வெளி​யில் இருந்து பெறப்​படும் ஆதர​வுடன் பெரும்​பான்​மையற்ற மைனாரிட்டி ஆட்​சியை அமைக்​கும் கட்​சியை அழைக்​கலாம்.

தற்​போது விஜய் அதிக இடங்​களை கைப்​பற்​றி​யுள்ள கட்சி என்ற அடிப்​படை​யில் ஆட்​சி​யமைக்க உரிமை கோராமல் கூட்​டணி ஆட்சி எனக்​கூறி காங்​கிரஸ் ஆதரவு கடிதத்​தை​யும் சேர்த்து ஆளுநரிடம் கொடுத்​ததுதான் வாய்ப்பை நழுவ விட்​டதற்​கான முக்​கிய காரணம் எனக் கூறப்​படு​கிறது.