அமெரிக்கா – ஈரான் இடையே நடைபெறும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு, பாகிஸ்தான் சரியான நடுநிலையாளர் அல்ல என்று ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
ஈரான் நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை ஆணைய பிரநிதி தஷ்டேசன், தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், மத்தியஸ்தம் செய்பவர், நிச்சயமாக ஒரு பாரபட்சமற்றவராக இருக்க வேண்டும், ஒரு பக்கம் பேசுபவராக இருக்கக் கூடாது என்று பதிவிட்டுள்ளார்.
பாகிஸ்தான், எங்களுக்கு நட்பு நாடு, அண்மை நாடும் கூட, ஆனால், நடுநிலையாளராக இருக்க ஏற்புடைய நாடு அல்ல, இரு தரப்பு பேச்சுவார்த்தையில் ஒரு நம்பகத்தன்மை அவசியம். அவர்கள் எப்போதும் டொனால்ட் டிரம்பின் விருப்பத்தை நிறைவேற்றுவதிலேயே கவனமாக இருக்கிறார்கள். அமெரிக்காவின் விருப்பத்துக்கு எதிராக பேசக்கூட மறுக்கிறார்கள. பாகிஸ்தானின் பரிந்துரைகளை முதலில் அமெரிக்கா ஏற்றுக் கொண்டு பிறகு, அதன்படி செயல்பட மறுக்கிறது என்பதைக்கூட வெளி உலகத்துக்குச் சொல் அந்நாடு மறுக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, அமைதிப் பேச்சுவார்த்தைக்காக அவ்வப்போது பாகிஸ்தான் சென்று வந்த நிலையில் இந்த விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அமைதிப் பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தானுக்கு ஈரான் வெளியுறவு துறை அமைச்சா் அப்பாஸ் அராக்சி சென்று இருந்தாா். எனினும் அவா் சனிக்கிழமை திடீரென ஈரான் திரும்பினாா். அத்துடன் அமெரிக்காவுடன் நேரிடையாக அமைதி பேச்சுவாா்த்தை நடத்த மாட்டோம் என்று ஈரான் அறிவித்தது. இந்த நிலையில்தான், இந்த பதிவு வெளியாகியுள்ளது.








