தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் போட்டயிடும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பிரதமர் நரேந்திரமோடி இன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளார்.
இதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலமாக திருவனந்தபுரத்துக்கு வருகிறார். பின்னர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மாலை 4 மணிக்கு நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தை வந்தடைகிறார். அங்கிருந்து கார் மூலமாக நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பு பகுதிக்கு வருகிறார்.
பின்னர், அங்கிருந்து வடசேரி எம்.ஜி.ஆர். சிலை வரை 1 கி.மீ. தூரத்துக்கு ரோடு ஷோ சென்று கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்காக ஆதரவு திரட்டவுள்ளார். கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் போட்டியிடும் பாஜக, கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி திறந்த வாகனத்தில் நின்றவாறு மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கவுள்ளார்.
இந்த ரோடு ஷோ நிகழ்ச்சியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, பொன்.ராதாகிருஷ்ணன், கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர்.
ரோடு ஷோ நிகழ்ச்சி முடிந்த பின்னர் மாலையில் மீண்டும் கார் மூலம் ஆயுதப்படை மைதானத்துக்கு சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டு செல்கிறார். அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி திரும்பவுள்ளார்.
பிரதமர் நரேந்திரமோடி வருகையை முன்னிட்டு, திருவனந்தபுரம் விமான நிலையம் முதல் நாகர்கோவில் ஆயுதப்படை மைதானம் வரை ஹெலிகாப்டர் ஒத்திகை நடத்தப்பட்டது. ரோடு ஷோ நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பாஜகவினர் செய்துள்ளனர். நாகர்கோவில் நகரம் முழுவதும் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகள், கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பு காமராஜர் சிலை முதல் வடசேரி எம்.ஜி.ஆர். சிலை வரை சாலையின் இருபுறமும் பொதுமக்கள் நின்று பிரதமரை காணும் வகையில் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன.






