ஐபிஎல் போட்டிகளுக்கு எப்படி தடை விதிக்க முடியும்? – சென்னை உயர் நீதி​மன்​றம் கேள்வி

சட்ட ரீதி​யாக எந்த தடை​யும் இல்​லாத​போது, சென்​னை​யில் நடை​பெறும் ஐபிஎல் கிரிக்​கெட் போட்​டிகளுக்கு எப்​படி தடை விதிக்க முடி​யும் என, சென்னை உயர் நீதி​மன்​றம் கேள்வி எழுப்​பி​யுள்​ளது.

சென்னை, சேப்​பாக்​கம் மைதானத்​தில் தேர்​தல் நேரத்​தில் ஐபிஎல் கிரிக்​கெட் போட்​டிகள் நடை​பெறு​வ​தால் சட்​டம் – ஒழுங்கை பாது​காப்​ப​தில் போலீ​ஸாருக்கு சிக்​கல் ஏற்​படும்.

கிரிக்​கெட் ரசிகர்​கள் என்ற பெயரில் கூடும் கூட்​டத்​தினர் அரசி​யல் கட்​சி​யினருக்கு ஆதர​வாக பிரச்​சா​ரம் செய்​யக்​கூடும் என்​ப​தால் அதற்கு தடை விதிக்​கக் கோரி​யும், குறிப்​பாக, சென்னை சூப்​பர் கிங்ஸ் அணி பங்​கேற்​கும் கிரிக்​கெட் போட்​டிகளை தேர்​தலுக்​குப் பிறகு தள்ளி வைக்​கக் கோரி​யும் சேப்​பாக்​கம் – திரு​வல்​லிக்​கேணி தொகுதி வாக்​காள​ரான பிர​பாகரன் என்​பவர் உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​திருந்​தார்.

இந்த வழக்கை அவசர வழக்​காக விசா​ரிக்​கக் கோரி மனு​தா​ரர் தரப்​பில், தலைமை நீதிபதி எஸ்​.ஏ.தர்​மா​தி​காரி மற்​றும் நீதிபதி ஜி.அருள்​முரு​கன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் முறை​யீடு செய்​யப்​பட்​டது.

அந்த முறை​யீட்டை ஏற்க மறுத்த நீதிப​தி​கள், சட்ட ரீதி​யாக எந்த தடை​யும் இல்​லாத​போது சென்​னை​யில் நடை​பெறும் ஐபிஎல் கிரிக்​கெட் போட்​டிகளுக்கு எப்​படி தடை விதிக்க முடி​யும் என கேள்வி எழுப்​பினர்.

வழக்கு எண்​ணிடப்​பட்டு முறை​யாக விசா​ரணைக்கு வரும் ​போது வழக்​க​மான நடை​முறை​யின்​படி விசா​ரிக்​கப்​படும் என தெரி​வித்த நீதிப​தி​கள், போட்​டிகள் நடப்​ப​தால் உங்​களுக்கு என்ன பிரச்​சினை என்​றும், கிரிக்​கெட் போட்​டிகளை பார்க்க விரும்​ப​வில்லை எனில் வீட்​டிலேயே இருங்​கள் என்​றும் கருத்து தெரி​வித்​தனர்​.