2 -3 வாரங்களில் வெளியேறுகிறோம் – டிரம்ப் சூசக அறிவிப்பு

த்திய கிழக்கில் ஒரு மாத காலமாக நீடித்து வந்த போர் ஒரு முக்கிய திருப்புமுனையை எட்டியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களுக்குள் அமெரிக்கப் படைகள் ஈரானை விட்டு வெளியேறும் என்றும், போர் முடிவுக்கு வரும் என்றும் அதிரடியாக அறிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஈரான் அணு ஆயுதங்கள் பெறுவதைத் தடுப்பதே எங்களது முதன்மை நோக்கம்; அது தற்போது நிறைவேற்றப்பட்டுவிட்டது. இனி போரைத் தொடர எந்தக் காரணமும் இல்லை” எனத் தெரிவித்தார். மேலும், ஈரானுடன் முறையான ஒப்பந்தம் எட்டப்படாவிட்டாலும், அமெரிக்கா தனது ராணுவ இலக்குகளை அடைந்துவிட்டதால் அங்கிருந்து வெளியேறுவது உறுதி என அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.குறிப்பாக, உலக எண்ணெய் விநியோகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தியைப் பாதுகாக்கும் பொறுப்பு இனி அமெரிக்காவிற்கு இல்லை என்றும், சீனா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் தங்களுக்குத் தேவையான பாதுகாப்பைத் தாங்களே உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் டிரம்ப் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

வெனிசுலாவில் நடத்தப்பட்ட ராணுவ நடவடிக்கைகளைப் போலவே, ஈரானிலும் அமெரிக்க விமானப்படை முழுமையான ஆதிக்கத்தைச் செலுத்தியுள்ளதாகவும், ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ராணுவ உபகரணங்கள் முற்றிலுமாகச் சிதைக்கப்பட்டுவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“ஈரான் தற்போது சமரசத்திற்காகக் கெஞ்சுகிறது” என்று கூறிய டிரம்ப், அமெரிக்க நிறுவனங்களுக்கு ஈரான் விடுத்துள்ள மிரட்டல்களை ஒரு பொருட்டாகவே கருதவில்லை என எள்ளி நகையாடியுள்ளார்.