என்னது! சிலிண்டர் விலை ₹2,246… அதிர்ச்சியில் ஹோட்டல் ஓனர்கள்!

சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. ரூ.2043.50 ஆக இருந்த வணிக சிலிண்டர் விலை ரூ.2,246.50 ஆக உயர்ந்துள்ளது. மேற்காசிய போர் காரணமாக எரிவாயு சிலிண்டர் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவும் விலையில் விலை உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் அந்நிய செலாவணி மதிப்பினை கணக்கில் கொண்டு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களானது எரிபொருள் விலையினை மாற்றி அமைத்து வருகிறது.

அந்த வகையில் ஏற்கனவே மார்ச் மாதம் 7 ஆம் தேதி வீட்டு பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையும், வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையும் அதிகரித்து இருந்தது. தமிழகத்தை பொறுத்தவரை 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் விலையானது ரூ.115 அதிகரித்து ரூ.2,043.50-க்கு விற்பனை செய்யப்பட்டது.இந்த நிலையில் ஏப்ரல் மாதத்திற்கான சிலிண்டர் விலைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி இன்று வணிக சிலிண்டர் விலை மேலும் உயர்ந்துள்ளது. வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை. இன்று 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் விலையில் ரூ.203 அதிகரித்துள்ளது. இதன்படி சென்னையில் வணிக பயன்பாடு சிலிண்டர் ரூ. 2,246.50 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை.

ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்திய நிலையில் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. இதனால் சர்வதேச அளவில் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. உலக கச்சா எண்ணெய் விநியோகத்தில் 20 சதவீதம் நடைபெறும் ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டதால் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பெரும் அளவு உயர்ந்தது. இந்தியாவும் எரிவாயு மற்றும் எண்ணெய் தேவைக்கு இறக்குமதியையே பெரிதும் நம்பியிருப்பதால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நம் நாட்டில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு இல்லையென்றாலும் எரிவாயு பற்றாக்குறை நிலவுகிறது. வீட்டு உபயோக சிலிண்டர் கிடைத்தாலும் வணிக சிலிண்டர்கள் கிடைப்பதில் கடும் நெருக்கடி ஏற்பட்டது. இதனால், நாடு முழுக்க ஹோட்டல்கள் நெருக்கடிக்கு உள்ளாகின. வீட்டு சமையல் கேஸ் சிலிண்டர் விலையும் கூட்டப்பட்டதோடு, புக்கிங் கால இடைவெளியும் அதிகரிக்கப்பட்டது. இந்த சூழலில் தான் வீட்டு பயன்பாட்டு 14.2 கிலோ சிலிண்டரின் விலை ரூ.60 உயர்த்தப்பட்டது. அதேபோல், வணிக பயன்பாட்டு 19 கிலோ சிலிண்டரின் விலை ரூ.115 உயர்ந்தது.

இதன்படி, வீட்டு சிலிண்டர் ரூ.868.50-லிருந்து ரூ.928.50-ஆகவும், வணிக சிலிண்டர் ரூ.1,929-லிருந்து ரூ.2,043.50-ஆக உயர்ந்தது. இதனால், இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் இன்று வணிக சிலிண்டர் விலை உயர்ந்ததால் வியாபாரிகள் மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.