காஷ்மீரைச் சேர்ந்த பெண் தீவிரவாதி ஆசியா அன்ட்ராபிக்கு டெல்லி நீதிமன்றம் நேற்று ஆயுள் தண்டனை விதித்தது.அவரது இரு கூட்டாளிகளுக்கு தலா 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
காஷ்மீரின் ஸ்ரீநகரை சேர்ந்தவர் ஆசியா அன்ட்ராபி (62). அவர் ஆரம்பத்தில் ஜமாத் இ இஸ்லாமி என்ற அமைப்பில் இருந்தார். அதில் இருந்து விலகிய அவர் கடந்த 1980ல் துக்தரன் இ மில்லத் என்ற புதிய அமைப்பை தொடங்கினார்.
கடந்த 1990ல் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் மூத்த தலைவர் ஆசிக் ஹுசைன் பக்தூவை அவர் திருமணம் செய்தார். கொலை வழக்கு தொடர்பாக கடந்த 1992 முதல் பக்தூவ் சிறையில் உள்ளார்.
பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத குழுக்களுடன் அவர் நெருங்கிய தொடர்பில் இருந்தார். இந்தியாவுக்கு எதிரான பல்வேறு சதித் திட்டங்களில் அவருக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
பொது அமைதியை சீர்குலைத்ததாக கடந்த 1993ம் ஆண்டில் அவர் முதல்முறையாக கைது செய்யப்பட்டார். பின்னர் பல்வேறு வழக்குகளில் அவர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டார். அவ்வப்போது ஜாமீனில் விடுதலையானார்.
டெல்லி கூடுதல் செஷன்ஸ் நீதிபதி சந்தர் ஜித் சிங் வழக்கை விசாரித்து கடந்த ஜனவரி 14ம் தேதி தீர்ப்பு வழங்கினார். அப்போது 3 பேரும் குற்றவாளிகள் என்று அவர் தீர்ப்பளித்தார்.








