தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் இன்று நடைபெறும் தமிழக வெற்றிக் கழக (TVK) தலைவர் விஜய்யின் நிர்வாகிகள் சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்சியின் அடித்தள அமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்தக் கூட்டம் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த நிகழ்வில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பல்வேறு சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து சுமார் 4,900 நிர்வாகிகள் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டத்திற்காக மாவட்ட காவல்துறை 32 கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது. அரசியல் ரீதியாக பார்க்கும்போது, டெல்டா மாவட்டங்களில் தனது செல்வாக்கை விரிவுபடுத்தும் நோக்கில் விஜய் இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். நீண்ட காலமாக திமுக வலுவாக உள்ள பகுதிகளில் கட்சியின் அடித்தளத்தை அமைப்பதற்கான முயற்சியாக இந்த நிர்வாகிகள் சந்திப்பு பார்க்கப்படுகிறது.
இந்த கூட்டத்தில் விஜய், திமுகவை ஓம் சக்தி.. பராசக்தி.. திமுக ஒரு தீய சக்தி என கடுமையாக விமர்சித்து உள்ளார். 2026 தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற கூட்டத்தில் பேசிய தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். தமிழகத்தில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் வாய்ப்பே இல்லை என்றும், கடந்த கால அரசியல் வரலாற்றைப் பார்த்தாலும் திமுக தொடர்ந்து ஆட்சி அமைத்த சம்பவங்கள் இல்லை என்றும் அவர் கூறினார். மேலும், தனது அரசியல் வருகையால் திமுகவும் அதிமுகவும் அச்சத்தில் உள்ளன என்றும், “விஜய் வந்தால் நமக்கு அரசியல் பிழைப்பு போய்விடும்” என்ற பயம் இரு கட்சிகளிடமும் இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மீனவர்கள் தொடர்பான பிரச்சனைகள் குறித்து பேசும்போது, வெறும் கடிதங்கள் எழுதுவது அல்லது உணர்ச்சி வசப்பட்ட வார்த்தைகள் பேசுவது போதாது என்று விஜய் கூறினார். “மானே, தேனே, பொன்மானே” என்று கடிதம் எழுதுவதால் பிரச்சனை தீராது; அதற்கு பதிலாக உறுதியான மற்றும் நடைமுறை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றார். தமிழக மீனவர்கள் மீது யாரும் அநீதி செய்ய முடியாத சூழலை உருவாக்க வேண்டும் என்றும், தவெக ஆட்சி அமைந்தால் மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
விவசாயம் குறித்து பேசும்போது, “எனக்கு விவசாயம் பற்றி அதிகமாக தெரியாது என்பதையும் நான் நேர்மையாக ஒத்துக்கொள்கிறேன்” என்று விஜய் கூறினார். ஆனால், சிலர் போல “நானும் டெல்டா மண்ணின் மகன்” என்று மக்களை ஏமாற்றும் விதமாக பேச மாட்டேன் என்றும் அவர் குறிப்பிட்டார். மக்களின் உணர்வுகளை கவர்வதற்காக போலியான உரைகள் பேசுவது தனது அரசியல் நடைமுறை அல்ல என்று ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து உள்ளார்.
சென்னையில் இருக்கும்போது “டெல்லி, டெல்லி” என்று கூறி மத்திய அரசை குறை கூறுபவர்கள், மத்திய அமைப்புகள் விசாரணைக்கு வரும்போது அதே டெல்லியையே நாடி செல்லும் நிலை உள்ளது என்று அவர் சாடினார். இந்த முரண்பாடான அரசியல் அணுகுமுறையை மக்கள் கவனித்து வருகிறார்கள் என்றும் விஜய் கூறினார்.
மேலும், தமிழகத்தில் நடைபெறும் மணல் கொள்ளை மற்றும் மணல் மாபியா தொடர்பான விவகாரங்களையும் அவர் தனது உரையில் எடுத்துரைத்தார். மணல் மாபியா கும்பல்களுக்கு அரசியல் ஆதரவு வழங்கப்படுவது திமுக ஆட்சியில்தான் நடக்கிறது என்பதை முதல்வர் ஸ்டாலின் மறுப்பாரா என்று விஜய் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து நடைபெறும் ஊழல் மற்றும் வளங்களின் தவறான பயன்பாடு காரணமாக, இந்த ஆட்சி தொடர்ந்தால் தமிழ்நாடு பொருளாதார ரீதியாக கடுமையான சிக்கலை சந்திக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.
மொத்தத்தில், தஞ்சாவூரில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் விஜய் வெளியிட்ட கருத்துகள், திமுக அரசின் செயல்பாடுகளை நேரடியாக குறிவைக்கும் வகையில் இருந்ததுடன், 2026 தேர்தலை நோக்கிய அவரது அரசியல் தாக்குதலின் ஒரு பகுதியாகவும் பார்க்கப்படுகிறது.







