முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இன்று திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.தேனி மாவட்டம் பெரியகுளம் தொகுதியில் பிறந்த ஓ.பன்னீர்செல்வம் 1970ம் ஆண்டு அதிமுகவில் இணைந்தார். 2001ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று முதல் முறை சட்டமன்ற உறுப்பினரானார். மே மாதம் சட்டமன்ற உறுப்பினரான நிலையில் அதே ஆண்டு செப்டம்பர் மாதம் முதல்வராகவும் பொறுப்பேற்றார்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பால் ஜெயலலிதா பதவி விலக நேரிட்டபோது, முதன்முதலாக முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அவர் ஜெயலலிதாவின் நாற்காலியில் அமர மறுத்து, ஒரு சாதாரண இருக்கையில் அமர்ந்து ஆட்சி நடத்தியது பெரும் பேசுபொருளானது. சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறை சென்றபோது, மீண்டும் முதலமைச்சரானார்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, மூன்றாவது முறையாக முதலமைச்சராகப் பதவியேற்றார். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது அவசரச் சட்டம் கொண்டு வந்து போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததில் இவருக்கு முக்கியப் பங்குண்டு.ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்தபோது, அப்போதைய முதலமைச்சர் ஓ.பி.எஸ் உடனடியாக டெல்லி சென்றார். 2017 ஜனவரி 19 அன்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து, ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினார். பிரதமர் தரப்பில் சட்ட ரீதியான தடைகள் சுட்டிக்காட்டப்பட்ட போதிலும், தமிழகத்தின் உணர்வுகளை அவர் அழுத்தமாகப் பதிவு செய்தார். இதனைத் தொடர்ந்து ஜனவரி 21, 2017 அன்று தமிழக ஆளுநரின் ஒப்புதலுடன் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதன் மூலம் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான சட்டப் பூர்வத் தடை தற்காலிகமாக நீக்கப்பட்டது.ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் சசிகலா தரப்புடன் நிகழ்ந்த மோதல் காரணமாக பன்னீர்செல்வம் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து ஜெயலலிதாவின் நினைவிடத்தில் சுமார் 40 நிமிடங்கள் தியானம் செய்து தர்ம யுத்தத்தைத் தொடங்கினார். பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக சில சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்த நிலையில் பாஜகவின் தலையீட்டில் அவர் மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்பட்டு துணைமுதல்வராக்கப்பட்டார். மேலும் கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் பன்னீர்செல்வம் அறிவிக்கப்பட்டார்.
2021 சட்டமன்ற தேர்தலில் வேட்பாளர் தேர்வில் பன்னீர், பழனிசாமி இடையேயான அதிகார மோதல் கட்சியின் பல முன்னணி நிர்வாகிகள் மத்தியில் கலக்கத்தை உருவாக்கியது. தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து பன்னீர்செல்வம் தரப்பை கட்சியில் இருந்து நீக்க கட்சியின் பொதுக்குழுவில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவர் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதிமுகவில் சேர தொடர்ந்து பல்வேறு வகைகளில் விருப்பம் தெரிவித்த பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை பொதுச்செயலாளர் பழனிசாமி கடைசி வரை ஏற்கவில்லை. இறுதியில் வேறு வழி இல்லாமல் ஓ.பன்னீர்செல்வம் இன்று தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுக.வில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.









