2011-ல் திமுக-காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, முதல் மாடியில் ரெய்டும், தரைத்தளத்தில் கூட்டணி பேச்சுவார்த்தையும் நடைபெற்றது. தமிழகத்தில் தன்மானம் உள்ள கட்சி அதிமுக தான். திருப்பத்தூரில் நடைபெற்ற நிகழ்வில், என்னைப்பற்றி தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்து முதல்வர் பேசியுள்ளார்.
என்னைப் பற்றியோ, அதிமுக பற்றியே பேச ஸ்டாலினுக்கு எந்த அருகதையும் இல்லை. திராணி இருந்தால் அதிமுக ஆட்சிக் காலத்தில் குறைகள் இருந்தால், அதை ஸ்டாலின் சுட்டிக்காட்டட்டும். அதுமுடியாததால், பாஜக அடிமை, ஊர்ந்து முதல்வரானார் என தவறான பிரச்சாரத்தை கையில் எடுத்துள்ளார். ஒரு முதல்வர் என்பவர் நாட்டுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும். முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டபோது, ஸ்டாலினை நம்பி கட்சி தலைவர் பதவியை கொடுக்கவில்லை. அவரே ஸ்டாலினை நம்பவில்லை. ஸ்டாலினுடன் நேருக்கு நேர் விவாதத்துக்கு தயார் என தொலைக்காட்சிப் பேட்டியில் தெரிவித்தேன். ஆனால் இதுவரை ஸ்டாலினிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. இரண்டு மாதங்களாக கூட்டணிக்கு கடை விரித்து காத்திருப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கூட்டணி தானாக அமைய வேண்டும். தானாக கனிந்த பழத்துக்கு தான் ருசி அதிகம். தேசிய ஜனநாயக கூட்டணி வலிமையாக உள்ளது. திமுக-காங்கிரஸ் கூட்டணிதான் ஆட்டம் கண்டுள்ளது. அவர்களிடையே தினமும் வார்த்தைப்போர் நடைபெற்று வருகிறது. கூட்டணி தர்மத்தை மதிக்கவில்லை என்றால் உரிய பதிலடி கொடுப்போம் என காங்கிரஸ் எம்.பி. தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் குழப்பம் நீடிக்கிறது. 2021 முதல் 2025 வரையிலான திமுக ஆட்சியில் தமிழகத்தில் 6,999 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அந்த சிறுமிகளின் கதறல் ஸ்டாலினுக்கு கேட்கவில்லையா? இந்த ஆட்சியில் பெண்களுக்கு மட்டுமில்லை, மூதாட்டிகளுக்கும், காவலர்களுக்கும் பாதுகாப்பில்லை. இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல் தான்வரும் சட்டப்பேரவைத் தேர்தல். டாஸ்மாக்கில் ஊழல் செய்த பணத்தைக் கொண்டு வாக்காளர்களை விலைக்கு வாங்க திமுக முயற்சிக்கிறது. வாக்காளர்கள் உஷாராக இருக்க வேண்டும். திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்டினர். திமுக ஆட்சிக்கு வந்ததும் வெள்ளைக்கொடி பிடிக்கின்றனர். கேலோ இந்தியா உட்பட பல்வேறு அரசு நிகழ்ச்சிகளுக்கு பிரதமர் மோடியை வரவழைத்து, கவுரவப்படுத்துகின்றனர். திமுக இரட்டை வேடமிடுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.








