சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் ஒரு பகுதியாக, சென்னை மெரினா கடற்கரை முதல் பெசன்ட் நகர் வரை ரோப் கார் சேவையை கொண்டு வர சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இதற்கான ஆலோசனைகளும் ஆய்வுப் பணிகளும் கடந்த 2022-ம் ஆண்டு முதல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.இந்தத் திட்டத்தின் முதல் கட்டமாக, உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையிலான பகுதியில் ரோப் கார் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அறிக்கை தயாரிக்க கடந்த 2024-ம் ஆண்டு சென்னை மாநகராட்சி சார்பில் டெண்டர் கோரப்பட்டது. இந்த சாத்தியக்கூறு அறிக்கையைத் தயாரிக்கும் பணி ஒரு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு, தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, மெரினா கலங்கரை விளக்கம் அருகே அந்தத் தனியார் நிறுவனம் சார்பில் மண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் 30 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி இந்தப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த நொச்சிக்குப்பம் பகுதி மீனவர்கள், கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்தின் முறையான அனுமதி இன்றி எப்படி இந்தப் பணிகளை மேற்கொள்ளலாம் எனக் கேள்வி எழுப்பி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மீனவர்களின் இந்த எதிர்ப்பைத் தொடர்ந்து, தனியார் நிறுவன ஊழியர்கள் மண் பரிசோதனைப் பணிகளைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு அங்கிருந்து சென்றனர்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கையில், “ரோப் கார் திட்டத்திற்காகத் தனியார் நிறுவனம் மூலம் மண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மீனவர்களின் தடையால் இப்பணி நிறுத்தப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக, காவல்துறை பாதுகாப்புடன் இந்தப் பணிகளைத் தொடரத் திட்டமிட்டுள்ளோம். மண் பரிசோதனை முடிந்து அதன் அறிக்கை கிடைத்த பின்னரே, அது கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்” என்று தெரிவித்தனர்.








