இந்நிலையில், மாநிலங்களவையில் விவாதத்திற்கு பதிலளித்து பிரதமர் மோடி நேற்று பேசியதாவது: உலகம் புதிய ஒழுங்கை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. 2ம் உலகப் போருக்குப் பிறகு மீண்டும் இந்த புதிய உலகில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இம்முறை இது இந்தியாவை நோக்கியே சாய்ந்துள்ளது. உலகம் அதன் தென் பகுதியை பற்றி பேசுகிறது. இந்தியா, தென்பகுதியின் உரத்த குரலாக உள்ளது. இதனால் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்ய பல நாடுகளும் முன்வருகின்றன. நாங்கள் எதிர்காலத்திற்கு தயாரான வர்த்தக ஒப்பந்தங்களை செய்து வருகிறோம். கடந்த சில நாட்களில் நாங்கள் 9 பெரிய வர்த்தக ஒப்பந்தங்களை செய்துள்ளோம். மேலும் இந்த ஒப்பந்தங்களின் தாயாக ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒப்பந்தம் அமைந்துள்ளது. இந்தியா-அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தை முழு உலகமும் பாராட்டுகிறது. இந்த வர்த்தக ஒப்பந்தம் குறிப்பாக இந்திய இளைஞர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்தியா இப்போது சீர்திருத்த விரைவுப் பாதையில் பயணித்து வருகிறது. 2047ம் ஆண்டுக்குள் ஒரு வளர்ந்த நாடு என்ற இலக்கை இந்தியா அடையும். கடந்த 11 ஆண்டுகளில் அதிக வளர்ச்சி மற்றும் குறைந்த பணவீக்கம் ஆகியவை நாட்டின் பொருளாதாரத்தின் வலிமையை பிரதிபலிக்கின்றன. இதன் மூலம், இந்தியா உலகின் 3வது பெரிய பொருளாதாரமாக உருவெடுக்க உள்ளது. எதிர்க்கட்சிகள் இன்று இந்த அவையிலிருந்து வெளிநடப்பு செய்தது வருத்தமளிக்கிறது. அவர்கள் சோர்வடைந்து வெளியேறிவிட்டார்கள். ஆனால் எந்த நாடும் வர்த்தக ஒப்பந்தம் செய்ய முன்வராத ஒரு நிலைக்கு இந்தியாவை அவர்கள் கொண்டு வந்ததற்காக ஒரு நாள் அவர்கள் பதிலளிக்க வேண்டியிருக்கும்.
காங்கிரசுக்கு எந்த தொலைநோக்கு பார்வையும் இல்லை, நல்ல குறிக்கோளும் இல்லை. அவர்கள் செய்த தவறுகளை திருத்துவதற்கு நாங்கள் அதிக நேரத்தை செலவழித்துக் கொண்டிருக்கிறோம். காங்கிரஸ் ஆட்சி செய்த ஒப்பந்தம் குறித்து யாரிடமாவது கேட்டால், ஊழல் நடந்த போபர்ஸ் ஒப்பந்தம் தான் நினைவுக்கு வரும். காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கங்கள் இந்தியாவின் நற்பெயரை அழித்துவிட்டன. அதை நாங்கள் தற்போது மாற்றியிருக்கிறோம்.
பிரதமர் பதவி தங்கள் குடும்பத்தின் பரம்பரைச் சொத்து என்று காங்கிரஸ் கட்சியின் முதல் குடும்பம் கருதுகிறது. அன்பின் கடையை பற்றி பேசுபவர்கள் ‘மோடி உன் கல்லறை தோண்டப்படும்’ போன்ற முழக்கங்களை எழுப்புகிறார்கள். இது தேர்தல் தோல்விகளால் ஏற்பட்ட விரக்தியின் வெளிப்பாடு. அவர்களால் ஒருபோதும் என் கல்லறையை தோண்ட முடியாது. என்னைப் போன்ற ஒரு ஏழை மனிதன் எப்படி இந்த பதவியை அடைந்து நீடிக்கிறான் என்பதை அவர்களால் ஜீரணிக்க முடியாததால்தான், என்னை தினமும் திட்டுகிறார்கள். கோடிக்கணக்கான தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் நாட்டின் ஏழை மக்களின் ஆசீர்வாதம் எனக்கு இருப்பதால், கல்லறை தோண்டும் முயற்சியில் எதிர்க்கட்சிகள் ஒருபோதும் வெற்றி பெற முடியாது. ஏழைகளின் நலனுக்காக எப்போதும் நான் தன்னலமின்றி உழைத்து வருகிறேன். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்பி திருச்சி சிவா கூறியதாவது: மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் கார்கே சில முக்கிய பிரச்னைகளை எழுப்ப விரும்பினார். எதிர்க்கட்சி தலைவர் கார்கேவின் கருத்துகளை கேட்ட பிறகு, பிரதமர் மோடி உரையை தொடங்கி இருக்கலாம். பிரதமருக்கு உள்ள முக்கியத்துவம் எதிர்க்கட்சி தலைவருக்கும் இருக்கிறது என்பதுதான் நாடாளுமன்ற ஜனநாயகம். ஆனால், நாடாளுமன்றம் ஒரு கட்சிக்கானதாக மாறி விட்டது; எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு உரிமை இல்லை. எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கருத்துகளை கேட்டு பதில் சொல்லும் தன்மை ஆளும்கட்சியினரிடம் இல்லை. எதிர்க்கட்சி உறுப்பினர்களின் நியாயமான கேள்விகளுக்கு ஆளும் கட்சி பதிலளிப்பது இல்லை. நாடாளுமன்றத்தை மதிக்காமல் ஆளும் பாஜ அரசு தங்கள் விருப்பம் போல செயல்படுகிறது. எதிர்க்கட்சித் தலைவரின் கருத்துகளை கேட்க பிரதமர் மோடி தயாராக இல்லை. அவதூறுகளை வாரி வீசுவது ஆளும்கட்சியினர்தான்; எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அல்ல. பிரதமரை பெண் எம்.பி.க்கள் தாக்க திட்டமிட்டனர் என ஒருவர் எப்படி அனுமானித்து கூற முடியும்? பாஜ ஆட்சி பணக்காரர்களுக்கானது; ஏழைகளுக்காக எந்த திட்டங்களும் இல்லை. அதானி, அம்பானி போன்றவர்களுக்கு நிலங்களையும், திட்டங்களையும் வாரி வழங்குகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
பிரதமர் மோடி மாநிலங்களவையில் உரையாற்றத் தொடங்கியதும், எதிர்க்கட்சி எம்பிக்கள் எழுந்து நின்று, ”அவையின் எதிர்க்கட்சி தலைவரான மல்லிகார்ஜுன கார்கேவை பேச அனுமதியுங்கள்” என கோஷமிட்டனர். இந்த அமளிக்கு மத்தியில் பிரதமர் மோடி தனது உரையை தொடங்கி பேசினார். அப்போது அவர், ”கார்கேவின் வயது முதிர்வை கருத்தில் கொண்டு அவர் இருக்கையில் அமர்ந்தபடி கோஷமிடலாம்” என்றார் கிண்டலாக. இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் ஒட்டுமொத்தமாக அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
பிரதமர் மோடியின் மாநிலங்களவை உரை குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று தனது எக்ஸ் பதிவில், ”மாநிலங்களவையில் பிரதமர் மோடியின் 97 நிமிட பேச்சு மற்றொரு தேர்தல் பிரசார பேச்சு. எப்போதும் போல அது அவதூறுகள், தாக்குதல்கள், திரிபுகள், நாடகங்கள், மறைமுகக் குற்றச்சாட்டுகள், அவமானங்களால் நிரம்பியிருந்தது. வழக்கம் போல அவரது அப்பட்டமான, வெட்கமற்ற பொய்களும் நிறைந்திருந்தன. அவரது சுயமோகமும், வார்த்தை ஜாலங்களும், மக்கள் உணர்வைத் தூண்டும் பேச்சுக்கள் மீதான அவரது மோகமும் முழுமையாக வெளிப்பட்டன” என கூறி உள்ளார்.







