கோவை அவிநாசி ரோட்டில் உப்பிலிபாளையம் முதல் கோல்டு வின்ஸ் வரை 10.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு கட்டப்பட்ட ஜி.டி. நாயுடு மேம்பாலம் கடந்த ஆண்டு திறக்கப்பட்டது . ரூ.1,671 கோடியில் இந்தமேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலே முதல் நீண்ட மேம்பாலம் என்ற பெருமை இந்த பாலம் பெற்றுள்ளது. இந்த பாலத்தில் விபத்துக்களை தடுப்பதற்காக வேக கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதனை கண்காணிக்க கேமரா வைக்கப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் வேகமாக செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. மேலும் சிலர் வாகனங்களில் சாகசத்தில் ஈடுபடுவதாகவும் புகார்கள் வந்தன. இதனை தடுக்கும் வகையில் மாநில நெடுஞ்சாலை துறை திட்டங்கள் பிரிவு சார்பில் ரூ 3 கோடியில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் கண்காணிப்பு கேமரா அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . இந்த கேமரா அமைக்கும் பணி இன்று தொடங்கியது. மேம்பாலம் சந்திப்பு பகுதிகளான கோல்டு வின்ஸ், உப்பிலிபாளையம் பகுதியில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட உள்ளது. இது தவிர அண்ணா சிலை, நவஇந்தியா பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரி ,ஹோப் காலேஜ், கொடிசியா விமான நிலைய சந்திப்பு உள்ளிட்ட 8 இடங்களில் உள்ள ஏறும் மற்றும் இறங்கு தளங்கள், அபாய வளைவுகள் உள்ளிட்ட பகுதிகள் என மொத்தம் 44 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. மேம்பாலத்தில் அதிகபட்சமாக 60 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும். இதனை மீறி செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் கேமரா பொருத்தும் பணி சில நாட்களில் நிறைவடையும். தமிழகத்தில் வேறு எந்த மேம்பாலங்களிலும் இதுபோன்ற ஏ .ஐ. தொழில் நுட்ப கண்காணிப்பு கேமரா அமைக்கப்படவில்லை. கோவையில் தான் முதன் முறையாக அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..
ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் ஏ.ஐ.தொழில்நுட்ப கேமராக்கள்.!








