தமிழகத்தில் அதிகரிக்கும் புற்றுநோய் பாதிப்பு

புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதற்காகவே ஆண்டுதோறும் பிப்ரவரி 4-ம் தேதி உலக புற்றுநோய் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நாளில் முக்கிய நோக்கம், உலகளவில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மற்றும் கல்வியை புகட்டுவதும், நோய் தடுப்புக்கான சீரான நடவடிக்கைகளை மேற்கொள்ள வைப்பதுமாகும். முறையான உணவுமுறை, உடற்பயிற்சி, பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலம் இந்த நோயின் பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும்.

அதேபோல் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே மிகவும் முக்கியம். ‘தொடக்க நிலையிலேயே கண்டறிதல், முறையான சிகிச்சை, வாழ்க்கை முறை மாற்றங்கள் ஆகியவை புற்றுநோயை எதிர்கொள்வதற்கான முக்கியக் கருவிகளாகும்’. புற்றுநோய்க்கான சிகிச்சைகளில், அறுவை சிகிச்சை, கீமோதெரபி, கதிரியக்க சிகிச்சை என மூன்று முக்கிய வகைகள் இருக்கின்றன. இவற்றில், மருந்துகள் மூலம் புற்றுநோய் செல்களை அழிப்பது கீமோதெரபி முறை என்றும் கதிர்வீச்சு மூலம் புற்றுநோய் செல்களை அழிக்கும் முறைக்கு கதிரியக்க சிகிச்சை முறை என்றும் பெயர். ஒரு சில உறுப்புகள் தவிர, பெரும்பாலான உறுப்புகளில் ஆண், பெண் இருபாலருக்கும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது.

பெண்களிடையே மார்பகப் புற்றுநோய், கருப்பைவாய் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய், கருமுட்டைப் புற்றுநோய் ஆகியவை அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் அதேவேளையில், ஆண்களுக்கு, நுரையீரல் புற்றுநோய், இரைப்பை புற்றுநோய், வாய்ப் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் ஆகியவை அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.சமீப காலமாக பெருங்குடல் (colon) மற்றும் மலக்குடல் (Rectum) ஆகியவற்றில் புற்றுநோய் பாதிப்புகள் ஏற்படுவது அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தமிழகத்தில் தற்போது 1,00,097 பேருக்கு புதிதாக புற்றுநோய் பாதிப்பு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 2012-ல் 53,022 ஆக இருந்த புற்றுநோய் பாதிப்பு, கடந்தாண்டில்(2025) அது இரு மடங்காக(1,00,097) அதிகரித்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இதில் 53,542 பேர் பெண்களும், 46,555 பேர் ஆண்களும் பதிவாகி உள்ளது. இதற்கிடையில், சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தரவு, 2025-ம் ஆண்டில் மார்பகம் மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் 10,821 பேர் மரணமடைந்துள்ளதாக கூறுகிறது.

இந்தியாவில் கடந்த 2020-ம் ஆண்டு 68,750 ஆக இருந்த புற்றுநோய் பாதிப்பு, 2021-ம் ஆண்டில் 76,968 ஆகவும், 2022-ம் ஆண்டில் 89,265 ஆகவும், 2023-ம் ஆண்டில் 92,816 ஆகவும், 2024-ம் ஆண்டில் 96,486 ஆகவும் உயர்ந்த நிலையில், 2025-ம் ஆண்டில் ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 8,505, காஞ்சிபுரத்தில் 7,295, வேலூரில் 6,525 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவாகி உள்ளது. மேலும் பெண்கள் அதிகளவில் மார்பக புற்றுநோய், கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. தொடர்ச்சியான கட்டிகள், விவரிக்கப்படாத எடை இழப்பு, நீடித்த வலி அல்லது அசாதாரண அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை பார்ப்பது மிகவும் முக்கியம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.புற்று நோய் பாதிப்பை கண்டறிய வலுவான பரிசோதனைத் திட்டம் மற்றும் மக்களின் வாழ்க்கைமுறையில் மாற்றங்களை அமல்படுத்தப்படாவிட்டால், வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

விழிப்புணர்வு இல்லாதது, மக்களின் வாழ்க்கை முறை, மன அழுத்தம், மாசுபாடு மற்றும் தாமதமான கண்டறிதல் ஆகியவையே நகர்ப்புறங்களில் புற்றுநோய் பாதிப்பு அதிகளவில் பதிவாக முக்கிய காரணமாக இருப்பதாகவும் சுகாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் வழக்கமான உடற்பயிற்சி, ஆரோக்கியமான உடல் எடையை பராமரித்தல், புகையிலை மற்றும் மதுவைத் தவிர்ப்பது மற்றும் அவ்வப்போது பரிசோதனைகளை மேற்கொள்வது போன்ற தடுப்பு நடவடிக்கைகள் ஆபத்தைக் குறைப்பதற்கு அவசியமாகக் கருதப்படுகின்றன.