திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் சமபந்தி நிகழ்வில், நரிக்குறவர் குழந்தைகளுக்கு, அனுமதி மறுக்கப்பட்டது கடும் விமர்சனத்திற்க்கு உள்ளாகி இருக்கிறது.
முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் நினைவு தினத்தை ஒட்டி, நெல்லையப்பர் கோவிலில் சம்பந்தி நடந்தது. சபாநாயகர் அப்பாவு உட்பட பலர் இதில் பங்கேற்றனர். சாப்பிட வந்த நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த குழந்தைகளை, அறநிலையத்துறை ஊழியர்கள், சாப்பாடு இல்லை எனக் கூறி திட்டி வெளியேற்றியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் நடந்த சமயத்தில் நெல்லை மேயர், துணை மேயர், அறநிலையத்துறை இணை ஆணையர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் அங்கே இருந்துள்ளனர். சமபந்தி விருந்திற்கு வந்த நரிக்குறவர் குழந்தைகளை விரட்டியது கடும் விவாத பொருளாகியுள்ளது. குழந்தைகள் வெளியேற்றப்படுவதை கண்ட டேவிட் ராஜா என்ற தன்னார்வலர், அந்த குழந்தைகளை அரவணைத்து ஓட்டலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கே அவர்கள் உண்ண உணவு வாங்கி கொடுத்து அனுப்பி வைத்துள்ளார். மனிதாபிமான அடிப்படையில் டேவிட் ராஜா, எந்தவித பாகுபாடு பார்க்காமல் குழந்தைகளுக்கு உணவு வாங்கி கொடுத்தது, பலரிடையும் வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் சமபந்தி என பெயர் வைத்து, இப்படி கடவுள் வாழும் நெல்லையப்பர் கோவிலில் நரிக்குறவர் குழந்தைகளை உள்ளே சாப்பிட அனுமதிக்காதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.






