இன்று மீண்டும் விசாரணை.!!

டெல்லி: தவெக தலைவர் விஜய் கரூரில் பிரசாரம் செய்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இதுபற்றி சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.

விஜய், புஸ்ஸி ஆனந்த் உள்பட தவெக நிர்வாகிகளிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டது. இந்நிலையில் தான் இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. இந்த சமயத்தில் சிபிஐ தனது இடைக்கால விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கினார். மாநிலம் முழுவதும் பிரசாரத்தை தொடங்கினார். கடந்த ஆண்டு அக்டோபர் 27 ம் தேதி கரூரில் அவர் பிரசாரம் செய்தார். அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் பெண்கள், குழந்தைகள் என்று 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தமிழ்நாடு மட்டுமின்றி நாட்டையே உலுக்கியது.

இந்த கரூர் கூட்ட நெரிசல் குறித்து விசாரிக்க எஸ்ஐடி எனும் சிறப்பு விசாரணை குழுவை தமிழக அரசு அறிவித்தது. அதுமட்டுமின்றி ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தையும் உருவாக்கியது.

இதனை எதிர்த்தும், சிபிஐ விசாரணை கோரியும் தவெக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், எஸ்ஐடி விசாரணை மற்றும் அருணா ஜெகதீசன் ஆணையத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. அதுமட்டுமின்றி வழக்கு விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைத்தது. அதுமட்டுமின்றி சிபிஐ விசாரணையை மேற்பார்வையிட ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழுவும் அமைக்கப்பட்டது.

தற்போது கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. வழக்கு தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைச்செயலாளர் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனாவிடம் விசாரிக்கப்பட்டது. அதன்பிறகு கட்சியின் தலைவரான விஜயிடம் 2 நாட்கள் டெல்லியில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

இதற்கிடையே தான் கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. இன்றைய தினம் சிபிஐ சார்பில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கூட்ட நெரிசல் தொடர்பாக ஆம்புலன்ஸ் டிரைவர்கள், அங்கு வசிக்கும் மக்கள், தவெக தலைவர் விஜய் உள்பட நிர்வாகிகள், போலீஸ்காரர்கள், டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்ளிட்டவர்களிடம் சிபிஐ விசாரணை நடத்திய நிலையில் அதுபற்றிய விவரங்கள் இன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட சான்ஸ் உள்ளது.