தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி, தங்களுக்கு வழங்கப்படவில்லை எனக் கூறி, கோவை அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் கல்லூரி நுழைவாயில் முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சட்டப் படிப்பில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்பு மற்றும் 3 ஆண்டு சட்டப் படிப்பு என இரு பிரிவுகள் உள்ளன. இதில் 5 ஆண்டு காலப் படிப்பு இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் அண்மையில் வழங்கப்பட்டு உள்ளன. ஆனால், 3 ஆண்டு சட்டப்படிப்பு பயிலும் மாணவர்களின் விவரங்களை அரசு இன்னும் சேகரிக்கவில்லை என்றும், அவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட வில்லை. “நாங்களும் அதே பாடத் திட்டத்தை தான் பயில்கிறோம். மடிக்கணினி கோரி உயர் கல்வித்துறை அமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும், இதுவரை முறையான பதில் அளிக்கவில்லை. அரசு எங்களை மாற்றான் தாய் மனப்பான்மையோடு நடத்துவது வேதனையளிக்கிறது,” என மாணவர்கள் தெரிவித்தனர்.
150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரி முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். “நீதி வேண்டும்.. மடிக்கணினி வேண்டும்”, “மாணவர்களைப் பிரிக்காதே” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.









