தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ரயில் பயணிகள் கூட்டமைப்பு சமீபத்தில் திருச்சிராப்பள்ளி கோட்ட ரயில்வே மேலாளர் மற்றும் இதர உயர் அதிகாரிகளை சந்தித்து, ரயில் பயணிகளின் பாராட்டுகளையும் நலன் சார்ந்த சில ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும் வழங்கியது.
தலைமை நிர்வாக ஆலோசகர் திரு. சி.எம். ஜெயராமன் மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு மையத்தின் (CVC) செயலாளர் திரு. எம்.எம். ராஜேந்திரன் ஆகியோர், குறிப்பாகச் சாமானிய மக்களுக்கு ரயில்வே துறை ஆற்றி வரும் அர்ப்பணிப்புடன் கூடிய சேவையையும்,திருச்சி கோட்டம் தொடர்ந்து ‘சிறந்த கோட்டம்’ விருது பெற்று வருவதற்கு கூட்டமைப்பு பாராட்டியது.
இந்தக் கலந்துரையாடலின் ஒரு பகுதியாக, பொதுமக்களின் நலனுக்காக பின்வரும் ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன:
- பயணிகளின் தேவை மற்றும் பிராந்திய இணைப்பைக் கருத்தில் கொண்டு, தற்போது மயிலாடுதுறை வரை இயக்கப்படும் ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலை, அதன் தற்போதைய நேரத்தை மாற்றாமல் சிதம்பரம் வரை நீட்டிக்க வேண்டும்.
- மூத்த குடிமக்கள் மற்றும் நீண்ட தூரம் பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக, ஜன் சதாப்தி ரயிலில் சோதனை அடிப்படையில் தலா ஒரு ஏசி மற்றும் ஏசி இல்லாத (2-Tier AC/Non-AC) படுக்கை வசதி கொண்ட பெட்டிகளை இணைக்க வேண்டும். இது – மயிலாடுதுறை வரை நீண்ட நேரம் அமர்ந்து பயணிக்க முடியாமல் சிரமப்படும் முதியவர்களுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும். இத்தகைய ‘டூ-டயர்’ முறை முன்பே நீண்ட தூர ரயில்களில் புழக்கத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
- திருநள்ளாறு புனிதத் தலத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயிலை திருநள்ளாறு வரை இயக்க வேண்டும். இது அந்த வழித்தடத்தில் உள்ள பிற ஆன்மீகத் தலங்களுக்கு (நாகூர், வேளாங்கண்ணி) செல்லும் பக்தர்களுக்குப் பெரிதும் பயனுள்ளதாக அமையும்.
- அடிக்கடி டிக்கெட் ரத்து செய்யப்படும் விவகாரம் குறித்துக் கவலை தெரிவிக்கப்பட்டது. முறையற்ற முன்பதிவுகளைத் தவிர்க்க, ஒரு மாதத்தில் குறிப்பிட்ட வரம்பிற்கு மேல் டிக்கெட் ரத்து செய்வதை ஆதார் எண்ணுடன் இணைத்து முறைப்படுத்த வேண்டும். மேலும், கடைசி நேர ரத்துகளைத் தவிர்க்கப் படிமுறை கூடுதல் கட்டணங்களை விதிக்கலாம். இத்தகைய ரத்துகளால் உண்மையான பயணிகள் பேருந்து போன்ற இதர வாகனங்களை நாடும் நிலை ஏற்படுகிறது, இது ரயில்வேக்கும் வருவாய் இழப்பை உண்டாக்கும்.
- ரயில்களில் கொண்டு செல்லப்படும் இலவச லக்கேஜ் அளவை முறைப்படுத்துவதன் மூலம் சக பயணிகளின் இடையூறைக் குறைக்கலாம் மற்றும் வருவாயை அதிகரிக்கலாம். நீண்ட காலத் திட்டமாக, ரயில்களின் நீளம் மற்றும் குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் பிளாட்பாரங்களின் நீளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- இத்தகைய நடவடிக்கைகள் மூலம் கிடைக்கும் கூடுதல் வருவாயைக் கொண்டு, மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டணச் சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும். இது குறித்து ரயில்வே அமைச்சகம், நிதி அமைச்சர் மற்றும் பிரதமர் ஆகியோரிடம் கூட்டமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
7. இந்தக் கடிதத்தின் மூலம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு ரயில் நிலையம் அமைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.
திருச்சி உதவி கோட்ட மேலாளரிடம் வழங்கப்பட்ட இந்த மக்கள் நலன் சார்ந்த ஆலோசனைகள், பயணிகளின் நலன் மற்றும் ரயில்வேயின் மேம்பாடு கருதி உரிய முறையில் பரிசீலிக்கப்படும் என ரயில் பயணிகள் கூட்டமைப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
தங்கள் உண்மையுள்ள,
(சி.எம். ஜெயராமன்) (கம்பன் அம்பிகாபதி)
தலைமை நிர்வாக ஆலோசகர் பொதுச் செயலாளர்







