Foreign-ல் இருந்து வரும் இந்தியர்கள்..!!

வெளிநாடுகளிலிருந்து இந்தியா வரும் பயணிகளுக்கான சுங்க விதிகளில் மத்திய நிதியமைச்சகம் பல்வேறு மாற்றங்களைச் செய்துள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்த “பேக்கேஜ் விதிகள்” மாற்றப்பட்டு, 2026 பிப்ரவரி 2, முதல் “சுங்கப் பேக்கேஜ் அறிவிப்பு மற்றும் செயலாக்கம் ஒழுங்குமுறை 2026” என்ற புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன. பயணிகள் கொண்டு வரும் இதரப் பொருட்களுக்கான சலுகைகளும் புதிய விதிகளில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

விமான நிலையங்களில் பயணிகளுக்கு ஏற்படும் அலைக்கழிப்புகளைக் குறைக்கவும், விதிகளை எளிமைப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதிய விதிகளின்படி, ஒரு ஆண்டிற்கும் மேலாக வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் அல்லது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் தங்க நகைகளை வரி ஏதுமின்றி கொண்டு வருவதற்கான வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

முக்கிய மாற்றமாக, இதில் தங்கம் அல்லது வெள்ளி என்று தனித்தனியாகக் குறிப்பிடப்படாமல், பொதுவாக நகைகள்என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, பெண் பயணிகள் 40 கிராம் எடை வரையிலான நகைகளை வரி இல்லாமல் கொண்டு வரலாம்.20 கிராம் எடை வரையிலான நகைகளை வரி இல்லாமல் கொண்டு வரலாம்.

பயணிகள் தாங்கள் கொண்டு வரும் நகைகள் குறித்த விவரங்களை ‘இந்திய சுங்க அறிவிப்பு படிவத்தில் கட்டாயம் குறிப்பிட வேண்டும். அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதல் நகைகள் இருந்தால், பழைய நகைகளின் எடை மற்றும் மொத்தம் கொண்டு வரப்படும் நகைகளின் எடை ஆகியவற்றைத் தனித்தனியாகத் தெரிவிக்க வேண்டும்.

பயணிகள் கொண்டு வரும் இதரப் பொருட்களுக்கான சலுகைகளும் புதிய விதிகளில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

விமானம் அல்லது கப்பல் வழியாக வரும் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் 75,000 ரூபாய் வரையிலான பொருட்களை வரி இன்றி கொண்டு வரலாம். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த வரம்பு 25,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நில எல்லை வழியாக வருபவர்களுக்கு எவ்வித வரிச்சலுகையும் கிடையாது.

அனைத்துப் பயணிகளும் 2 லிட்டர் வரையிலான மதுபானம் அல்லது ஒயின் கொண்டு வர அனுமதிக்கப்படுவர். புகையிலையைப் பொறுத்தவரை, 100 சிகரெட்டுகள் அல்லது 25 சுருட்டுகள் அல்லது 125 கிராம் புகையிலை வரை வரி இன்றி கொண்டு வரலாம்.

18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பயணிகள், ஒரு புதிய லேப்டாப் அல்லது நோட்பேடைத் தங்களது பேக்கேஜில் கொண்டு வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

புதிய விதிகளின்படி சில பொருட்களை இந்தியாவுக்குள் கொண்டு வரக் கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது:

இந்தியாவின் எல்லைகளைத் தவறாகக் காட்டும் வரைபடங்கள் மற்றும் புத்தகங்கள்.

போதைப்பொருள் மற்றும் மனநலத்தைப் பாதிக்கும் மருந்துகள்.

அறிவுசார் சொத்துரிமை மீறப்பட்ட (போலிப் பிரதிகள்) பொருட்கள்.

வனவிலங்கு பொருட்கள் மற்றும் சில குறிப்பிட்ட பறவைகள், விலங்குகள்.

கள்ள நோட்டுகள் அல்லது நாணயங்கள்.

இந்த புதிய விதிகள் மூலம் விமான நிலையங்களில் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவது குறையும் என்றும், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இது பெரும் நிம்மதியைத் தரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.