கேட்டாலே நடுங்க வைக்கும் தங்கம் விலை..!!

தங்கம் விலை இந்த ஆண்டு தொடங்கியதிலிருந்தே சிறிதளவும் சரிவில்லாமல் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டிக் கொண்டிருப்பதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக ஜனவரி 29, 2026 தேதியான இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அந்த வகையில், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 9,520 ரூபாய் உயர்ந்து ரூ.1,34,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 1,190 ரூபாய் உயர்ந்து ரூ.16,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று தங்கம் விலை கிட்டத்தட்ட 10,000 ரூபாய் உயர்ந்துள்ளது.

நாளுக்கு நாள் இவ்வாறு அதிரடியாக தங்கம் விலை உயர்வை சந்தித்து வரும் சூழலில், தங்கம் பொதுமக்களுக்கு எட்டாக்கனியாக மாறியுள்ளது. 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.18,327-க்கும், ஒரு சவரன் ரூ.1,46,616-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஜனவரி 28ஆம் தேதி நிலவரப்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.15,610-க்கும், ஒரு சவரன் ரூ.1,24,850-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், ஜனவரி 27ஆம் தேதி ஒரு கிராம் ரூ.14,960-க்கும், ஒரு சவரன் ரூ.1,19,680-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

ஜனவரி 26ஆம் தேதி ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.15,250-க்கும், ஒரு சவரன் ரூ.1,22,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஜனவரி 25ஆம் தேதி ஒரு கிராம் ரூ.14,750-க்கும், ஒரு சவரன் ரூ.1,18,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. குறிப்பாக, உலக அளவில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார பதற்றம், உலக வங்கிகளில் ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் தங்கத்தின் மீது முதலீடு செய்வது, உலக பொருளாதாரத்தில் நிலவும் நிச்சயமற்ற சூழ்நிலை போன்ற காரணங்களால் தங்கத்தில் முதலீடுகள் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வரக்கூடிய நாட்களிலும் இந்த விலை உயர்வு தொடரும் என வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.