சென்னையில் உருவாகும் பிரம்மாண்ட AI பூங்கா..!

சென்னையில் அமைய உள்ள செயற்கை நுண்ணறிவு பூங்கா, தமிழகத்தில் மிகப்பெரிய ஏ.ஐ., புரட்சி உருவாக்கும் என நம்பப்படுகிறது.”
உலக அளவில் வளர்ந்து வருகின்ற தொழில்நுட்பமாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இருந்து வருகிறது. உலகில் இருக்கும் முன்னணி நாடுகள் அனைத்தும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் முதலீடு செய்து வருகின்றன.

அந்த வகையில் தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு பூங்காவை அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை நமது தமிழ்நாட்டு மண்ணுக்கும் மொழிக்கும் ஏற்றவாறு மாற்றியமைக்கும் ஒரு புரட்சிகரமான முயற்சியைத் தமிழ்நாடு அரசு கையில் எடுத்திருக்கிறது.

அதன் ஒரு முக்கியப் பகுதியாக, தன்னாட்சி ஏ.ஐ. பூங்கா ஒன்றைச் சென்னை தரமணியில் உள்ள சென்னை ஐ.ஐ.டி., ஆராய்ச்சி பூங்கா அருகில் பத்தாயிரம் கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது. இந்தப் பூங்கா அமைப்பதற்காகப் பெங்களூருவைச் சேர்ந்த ‘சர்வம்’ நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்தப் பூங்கா அமைக்கப்பட்டால், தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் மாணவர்களை, அவற்றை உருவாக்கும் இடத்திற்கு நகர்த்த முடியும். செயற்கை நுண்ணறிவு பூங்காவால் தமிழக மக்களுக்கும் சாமானிய மக்களுக்கும் என்ன பயன் என கேள்வி எழலாம். தமிழக மக்களின் தரவுகள் அனைத்தும் தமிழ்நாட்டிற்கு உள்ளாகவே பாதுகாக்கப்படும்.

இதற்காக வெளிநாட்டு நிறுவனங்களின் உதவியை நாட வேண்டிய அவசியம் இருக்காது. இதன் மூலம் சுமார் ஆயிரம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்புகள் கிடைக்கும். இதன் மூலம் பல லட்சக்கணக்கான மக்கள் மறைமுகமாகப் பலன்களைப் பெறுவார்கள். தமிழுக்கு உரிய இலக்கணம், வட்டார வழக்குச் சொற்கள், கலாச்சார நுணுக்கங்களை இந்த ஏ.ஐ. மாதிரிகள் புரிந்துகொள்ளும். இதன் மூலம் அரசு அலுவலகங்களில் கோப்புகளையும் எளிதாகக் கையாள முடியும்.

கல்வி, மருத்துவம் மற்றும் விவசாயத் துறைகளில் ஏ.ஐ. பயன்பாடு இதன் மூலம் அதிகரிக்கும். பல்வேறு மொழிகளில் இருக்கும் தகவல்களை எளிதாக மாணவர்களுக்குத் தமிழில் விளக்கிச் சொல்லும் வசதி உருவாகும். விவசாயத் துறையிலும் விவசாயிகளுக்குப் புரியும் வகையில் தமிழில் அவர்களுக்கான வழிகாட்டல் வழிமுறைகளை இது வழங்கும்.

மருத்துவத் துறையில் மக்களுக்குப் புரியும் வகையில் நோய் அறிகுறிகள் குறித்த ஆலோசனைகளை எடுத்துச் சொல்லும் வகையில் தமிழில் இது உருவாக்கப்படும். இந்தச் செயற்கை நுண்ணறிவு பூங்கா தமிழ்நாட்டில் அறிவு நுட்பத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் மாநிலமாக மட்டுமில்லாமல், உலகத்திற்கே செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஏற்றுமதி செய்யும் மாநிலமாகவும் தமிழ்நாடு மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.