ராணுவத்தில் வேலை என ஆசை காட்டி ரூபாய் 2.40 கோடி சுருட்டிய கும்பல் : கோவையில் பரபரப்பு – மதுரை நபர் உட்பட இருவர் மீது வழக்கு பதிவு செய்து தீவிரத் தேடுதல் !!!
இந்திய ராணுவத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி கோவையைச் சேர்ந்த இளைஞர்களிடம் சுமார் 2.40 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்து உள்ள அதிர்ச்சி தகவல் வெளிச்சத்திற்கு வந்து உள்ளது.இந்த மோசடி தொடர்பாக மதுரை மற்றும் கோவையைச் சேர்ந்த இருவர் மீது மாநகர குற்ற பிரிவு காவல் துறை வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
கோவை, ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி, இவருக்கு சின்ன மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மதன் மோகன்ராஜ் மற்றும் மதுரையைச் சேர்ந்த மனோஜ் பிரபாகரன் ஆகியோர் அறிமுகமாகி உள்ளனர். ராணுவத்தில் தங்களுக்கு உயர் அதிகாரிகள் தொடர்பு இருப்பதாகவும், அதன் மூலம் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகளை கூறி உள்ளனர்.இதை நம்பிய பார்த்தசாரதி அவர்களிடம் ரூபாய் 14,20,000 கொடுத்து உள்ளார். ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் வேலை வாங்கித் தராமல், பணத்தையும் திருப்பி தராமல் இருவரும் இழுத்து அடித்து வந்து உள்ளனர்.
தான் ஏமாற்றப்பட்டது உணர்ந்த பார்த்தசாரதி கோவை மாநகர குற்றப்பிரிவில் புகார் அளித்து உள்ளார். வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் முதல் கட்ட விசாரணையில் பார்த்தசாரதி மட்டுமல்லாமல், மேலும் பல இளைஞர்களிடம் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.அதில் இதுவரை சுமார் 20 பேரிடம் மொத்தம் ரூபாய் 2 கோடியே 40 லட்சத்து 15 ஆயிரத்தை மதன் மோகன் மற்றும் மனோஜ் பிரபாகரன் ஆகியோர் மோசடி செய்து உள்ளது தெரியவந்து உள்ளது.
மேலும் ராணுவத்தில் சேர்வதற்கு இந்த நபர்களிடம் பணம் கொடுத்து ஏமாந்து மற்ற நபர்கள் யாரேனும் ? இருந்தால் அவர்கள் உடனடியாக கோவை மாநகர குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளிக்கலாம், மோசடி பேர்வழிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் துறையினர் தெரிவித்து உள்ளனர்.கோவையில் ராணுவத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடந்த சம்பவம் வேலை தேடும் இளைஞர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .








