கார்த்திகை மாதத்தின் தொடக்கத்தில் சபரிமலை ஐயப்பனைத் தரிசிக்க மாலை அணிந்து விரதம் இருந்து வருகின்றனர்.கோவை, ரத்தினபுரி சாஸ்திரி வீதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அருள் மாரியம்மன் திருக்கோயிலில், ஐயப்ப பக்தர்கள் சார்பில் நடைபெற்ற ‘ஐயப்ப விளக்குத் திருவிழாவில் 48 நாட்கள் கடும் விரதம் இருந்து, சபரிமலைக்குத் தயாராகும் பக்தர்கள் திருவிளக்கு திருவிழா நடைபெற்றது.அதிகாலை கணபதி ஹோமத்துடன் தொடங்கி, உச்சி பூஜை மற்றும் மஹா அன்னதானம் என அடுத்தடுத்த நிகழ்ச்சி நிரல்களால் களைகட்டியது.
மேளதாளங்கள் முழங்க நடைபெற்ற ‘பாலக்கொம்பு எழுந்தருளுவித்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து, மாலையில் சிவானந்தா காலனி டாடாபாத் பகுதியில் உள்ள புற்று விநாயகர் சன்னதியில் இருந்து தொடங்கிய பிரம்மாண்ட ஊர்வலம், கோவையின் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்தது.இந்த ஊர்வலத்தின் முத்தாய்ப்பாக, நூற்றுக்கணக்கான பெண்கள் கைகளில் மங்கள விளக்குகள் ஏந்தி அணிவகுத்துச் செல்ல, தாலப்பொலி மற்றும் வாத்தியங்கள் முழங்கத் தேர் ஊர்வலம் புறப்பட்டது.
ஊர்வலத்தின் போது, ‘சுவாமியே சரணம் ஐயப்பா’ என்ற பக்தி கோஷங்கள் விண்ணைப் பிளக்க, ஐயப்ப பக்தர்கள் பாடல்கள் பாடி உற்சாகமாக நடனமாடியது அங்கு இருந்த பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.ஊர்வலத்தின் இறுதியில் அருள் மாரியம்மன் கோயிலை அடைந்த பக்தர்களுக்குச் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு, மஹா பிரசாதம் வழங்கப்பட்டது.









