ரோபோ சங்கர் மகள் பாடல் வெளியீட்டு விழா!

தனக்கு குழந்தை பிறந்த உடன், அப்பாவை அழைத்துக்கொண்டு குடும்பத்தோடு காசிக்கு செல்ல வேண்டும் என கூறி இருந்ததாகவும், ஆனால் அப்பா இறந்ததற்கு பிறகு அவரை குடுவையில் அடைத்து காசிக்கு கொண்டு சென்றது மிகுந்த வேதனை அளித்ததாக, மறைந்த பிரபல நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கர் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

மறைந்த பிரபல நடிகர் ரோபோ சங்கர் மகள் இந்திரஜா சங்கர் துவங்கியுள்ள விளம்பர நிறுவனமான
ரோபோ ஈவண்ட்ஸ் & எண்டர்டைமண்ட்ஸ் மற்றும் சாய் லோகபாலா பிரைவேட் லிமிடட் இணைந்து சாய்நாத் மகாராஜ் கங்க ஆராத்தி எனும் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது.கோவை கோவை சுங்கம் பைபாஸ் சாலையில் உள்ள சிறுதுளி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரபல தொழிலதிபர் வனிதா மோகன் மற்றும் சாய் லோகபாலா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பாலசரவணன் உள்ளொட்டோர் கலந்து கொண்டு பாடலை வெளியிட்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இந்திரஜா சங்கர்,இன்றைய தினம் சிறப்பான தினம் என்றும், முதல் நிகழ்ச்சியாக இதனை நடத்தியுள்ளதாகவும் கூறினார்.தனது முதல் தயாரிப்பில் சாய்பாபாவிற்கு பாடல் வெளியிட்டுள்ளதாகவும், இந்தப் பாடலை தனது கணவர் கார்த்திக் எழுதியுள்ளதாகவும் கூறிய அவர்,தனது அப்பாவிற்கு பிறகு தனது கணவர் மிகவும் உதவிகரமாக இருந்து வருவதாக குறிப்பிட்டார்.

அனைவரையும் சிரிக்க வைக்க வேண்டும் என தனது அப்பா சொல்லி கொடுத்ததாகவும் அவர் விட்ட இடத்தில் இருந்து இந்த நிறுவனத்தை தொடங்கியுள்ளோம் எனவும் அப்பா இல்லாத இந்த இடத்தில் மிகவும் வருத்தப்படுவதாகவும் அப்பா எங்களுக்காக மேலிருந்து ஆசிர்வதிப்பார் எனவும் அவர் இல்லாதது மிகவும் வருத்தம் அளிப்பதாகவும் கண்கலங்க கூறினார்.தனக்கு குழந்தை பிறந்த பிறகு தந்தையுடன், முதலில் காசிக்கு தான் செல்ல வேண்டும் என தனது தந்தையிடம் கூறியதாகவும், ஆனால் அவர் இறந்த பிறகு, அவரை குடுவையில் அடைத்து காசிக்கு கொண்டு சென்றது மிகவும் வருத்தம் அளிக்கிறது என்றும் வேதனை தெரிவித்தார்.இதேபோல் அப்பா எங்களுடன் இல்லை என நினைக்கவில்லை, அவர் படப்பிடிப்புக்கு நடிக்கச் சென்றுள்ளார் என்று தான் நினைத்து நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றும் உருக்கமாக கூறினார்.