2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், கோவை மாநகருக்கு வந்த முதலமைச்சர் மு.கஸ்டாலின் செம்மொழிப் பூங்கா அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டிப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.
கோவை மாநகராட்சி, காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாகப் பகுதியில் 165 ஏக்கர் நிலப்பரப்பில் அமைத்திட, முதற்கட்டமாக 45 ஏக்கர் நிலப்பரப்பில், உலகத் தரத்திலான செம்மொழிப் பூங்கா அமைப்பதற்கு 208.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அனுமதி வழங்கப்பட்டது.அதனைத்தொடர்ந்து, செம்மொழிப் பூங்காவில் தாவரவியல் பூங்கா, சூரியதகடு, சிற்பங்கள், பேட்டரியில் இயங்கும் வாகனங்கள், உக்கடம் கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரை குழாய் மூலம் செம்மொழி பூங்காவிற்கு எடுத்து வருதல் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவினை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் திறந்து வைத்தார்.
செம்மொழிப் பூங்காவின் சிறப்பம்சங்கள்:
இப்பூங்காவில், செம்மொழி வனம், மூலிகை தோட்டம், மகரந்த தோட்டம். நீர்த் தோட்டம், மணம்கமிழ் தோட்டம். பாலைவனத் தோட்டம், மலர்த் தோட்டம், மூங்கில் தோட்டம், நட்சத்திர தோட்டம், ரோஜா தோட்டம், பசுமை வனம் போன்ற 23 வகையான தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள செண்பக மரம், கல் இலவு, மிளகு மரம், கடல் திராட்சை,திருவோட்டு மரம், கலிபுடா, வரிகமுகு, மலைபூவரசு எலிச்சுழி, குங்குமம் மரம் உள்ளிட்டவை உள்ளன.மேலும், செம்மொழி வனத்தில் சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள மரங்கள் மற்றும் செடிகள் நடப்பட்டு உள்ளதோடு, 2000-க்கும் மேற்பட்ட ரோஜா வகைகள் ரோஜா தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது.அத்துடன் இப்பூங்கா வளாகத்தில் கடையேழு வள்ளல்களின் கற்சிலைகளும் நிறுவப்பட்டுள்ளன.

செம்மொழிப் பூங்கா வளாகத்தில், நுழைவுச்சீட்டு வழங்குமிடம் மற்றும் அனுபவ மையக் கட்டடம். 500 பார்வையாளர்கள் அமரக்கூடிய வகையில் திறந்தவெளி அரங்கம், பூங்காவில் பணியாற்றும் தோட்டத் தொழிலாளர்களுக்கு அறை. உணவகம். ஒப்பனை அறை. சில்லறை விற்பனை நிலையம், செயற்கை நீர்வீழ்ச்சியுடன் கூடிய நுழைவு வாயில் போன்ற பல்வேறு சிறப்பம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது.செம்மொழிப் பூங்கா வளாகத்தில் தரைத் தள வாகன நிறுத்துமிடத்தில் மொத்தம் 453 கார்கள். 10 பேருந்துகள் மற்றும் 1000 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் அளவிற்குக் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், செம்மொழிப் பூங்கா வளாகத்தினுள் ஜெர்மன் தொழில்நுட்பத்தில் மழைநீர் சேகரிப்பு வடிகால் அமைப்பு 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது.இப்பூங்கா வளாகத்தில் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கு நடைபாதைகளுடன் சாலை வசதியும் அமைக்கப்பட்டுள்ளதோடு, மகளிர் சுயஉதவி குழுக்களால் தயாரிக்கப்பட்ட பொருள்களை விற்பனை செய்வதற்கு ஏதுவாக மதி அங்காடியும் நிறுவப்பட்டுள்ளது.செம்மொழிப் பூங்கா வளாகத்தினுள், உலகத் தரத்தில் உயர்தர உடற்பயிற்சிக் கருவிகளுடன் கூடிய திறந்தவெளி உடற்பயிற்சி கூடம். 4,000 சதுர அடி பரப்பளவில் உள்வன மாதிரி காட்சியமைப்பு (Terrarium). குழந்தைகள் விளையாடுவதற்கு 14,000 அடி பரப்பளவில் சதுர விளையாட்டுத்திடல். சிறுவர்களுக்கான உள்விளையாட்டு அறை. மாற்றுத்திறனாளிகள் விளையாடுவதற்கு ஏதுவாக தனித்தன்மையான விளையாட்டுத்திடல் போன்ற பல்வேறு பொழுதுபோக்கு வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இவ்வளாகத்தில் உள்ள நுழைவுச்சீட்டு மற்றும் அனுபவ மையக் கட்டடத்தில் பழங்காலத் தமிழர்கள் பயன்படுத்திய பொருள்களுடன் கூடிய அருங்காட்சியகம் மற்றும் தாவரவியல் அருங்காட்சியகம். இளம்வயதினர் படிப்பதற்கு ஏதுவாகப் படிப்பகம் முதியோர்களும் மாற்றுத்திறனாளிகளும் பயணிக்கும் வகையில் சக்கர நாற்காலிகள், பேட்டரி வாகனங்கள் போன்ற வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.செம்மொழிப் பூங்கா வளாகத்தில் உள்ள மரங்கள் மற்றும் தாவரங்கள் குறித்த தகவல்கள் அடங்கிய பெயர்ப் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளதோடு. அதில் QR குறியீடுகள் மற்றும் Barcode போன்ற தொழில்நுட்ப வசதிகளும் நிறுவப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.








