பாராளுமன்ற நடவடிக்கைகள் குறித்தும், அதன் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதனை, மிக தத்ரூபமாக மாணவ மாணவிகள் அரங்கேற்றிய மாதிரி பாராளுமன்ற காட்சிகள், வருங்காலத்தில் மாணவர்களின் அரசியல் ஆர்வத்தை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருந்தது.

கோவை கார்மல் கார்டன் மேல்நிலைப் பள்ளியின் வைரவிழா நினைவு கொண்டாட்டங்கள் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக, பள்ளி மாணவ மாணவிகள், இந்திய பாராளுமன்றத்தின் நிகழ்வுகளை தத்ரூபமாக காட்சிப்படுத்தி இருந்தனர். இன்றைய அரசியல் சூழலில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரச்சனைகளையும், அதன் தாக்கத்தையும் மாணவ மாணவியர்கள் எடுத்துரைத்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா, நிர்மலா சீதாராமன், ராகுல் காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி போன்று பாராளுமன்றத்தில் மாதிரி உரை நிகழ்த்தப்பட்டது. பண மதிப்பிழப்பு விவகாரம், பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள், மும்மொழிக் கொள்கை, கல்வி மேம்பாடு உள்ளிட்ட மக்கள் பிரச்சனைகளை மாணவ மாணவிகள், அந்தந்த கட்சி பிரமுகர்களின் பாவனைகளுடன் முன் வைத்தனர். அரசியல் தலைவர்கள் போன்று உடை உடுத்தி, அவர்களின் முக பாவனைகளுடன் மாணவ மாணவிகளின் பதிப்பு, நிஜ பாராளுமன்ற நிகழ்வை நேரில் பார்ப்பது போல் அமைந்திருந்தது.

மாணவ மாணவிகளின் வெளிப்படுத்துதலை, நடுவர்களாக டாக்டர் ஸ்ரீ குமார், மூத்த பத்திரிகையாளர் சுதாகர் நடுவர்களாக இருந்து பகுப்பாய்ந்தனர். சிறப்பாக நாட்டு மக்களின் பிரச்சினைகளை, முறையாக நிகழ்த்திய மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. படிக்கும் காலத்தில் நாட்டின் அரசியல் சூழல், மக்கள் பிரச்சினைகளை மாணவ மாணவிகள் தெரிந்து கொண்டு அரங்கேற்றிய இந்த மாதிரி பாராளுமன்ற மேடை, அவர்களின் அரசியல் ஆர்வத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்திருந்தது.










