சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்த மாநிலம் தமிழகம்” – கோவை மாணவி பாலியல் வழக்கை கண்டித்து ஜி.கே.வாசன் கடும் குற்றச்சாட்டு…
கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை கண்டித்து, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் இன்று மாலை கோல்ட் வின்ஸ் பகுதியில் மனித சங்கிலி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் வி.வி.வாசன் உட்பட கட்சியின் பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், போதைப்பொருள் விற்பனையை ஒழிக்கவும் கோரியும், கோவை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் எனக் கோரியும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.வாசன்,
“தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் வன்முறை தொடர்ந்து நடைபெறுகிறது. போதைப்பொருள் பரவல் மிகுந்து வருகிறது. தென்னிந்தியாவில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் மிகவும் மோசமான மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது. கோவை மாணவி பாலியல் வழக்கு அதற்கான ஒரு சரியான எடுத்துக்காட்டு,” எனக் குறிப்பிட்டார்.
அவர் மேலும்,
“அரசும், காவல் துறையும் செயலற்ற நிலையில் உள்ளன. போதைப்பொருள் பரவலும் டாஸ்மாக் கடைகளும் இத்தகைய சம்பவங்களுக்கு அடித்தளம் அமைக்கின்றன. மகளிர் கிரிக்கெட்டில் சாதனை பேசும் மாநிலம், மறுபுறம் பெண்களுக்கு எதிரான வன்முறைகளால் வேதனையும் அவமானத்தையும் சந்திக்கிறது. இது திராவிட மாடல் அரசின் தோல்வி,” என விமர்சித்தார்.
இத்தகைய கொடூர சம்பவங்கள் எதுவும் இனி நடைபெறாத வகையில் அரசு கடுமையாக செயல்பட வேண்டும் என்றும், குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும் அவர்,
“இந்நிலை தொடர்ந்தால், சட்டமன்றத் தேர்தலில் இந்த அரசு மக்கள் ஆதரவை இழக்கும். குறிப்பாக பெண்கள், மாணவர்கள் தங்கள் வாக்குகள் மூலம் இதற்கு பதிலளிப்பார்கள்,” எனக் கூறினார்.
செய்தியாளர்கள் எழுப்பிய “தவெக கூட்டணியில் சேர்வீர்களா?” என்ற கேள்விக்கு பதிலளித்த அவர்,
“அதிமுக, பாஜக, தமாக கூட்டணி தற்போது வலுவான அணியாக உள்ளது. ஒத்த கருத்து கொண்ட பல கட்சிகள் விரைவில் இதில் இணைவதற்கான வாய்ப்பு உள்ளது. திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பது அனைவரின் குறிக்கோள்; அதை எங்களது கூட்டணி நிறைவேற்றும்,” என தெரிவித்தார்.









