சென்னை: தமிழக அரசு வழிகாட்டுதல்களை அறிவித்த பின்னர் விஜய்யின் சுற்றுப்பயணத்தை தொடங்கவும், அதற்கு முன்பு நவ.
5-ம் தேதி சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடத்தவும் தவெக நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. கரூர் துயரச் சம்பவத்தால் முடங்கிய நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தற்போது மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது. உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களை கடந்த 27-ம் தேதி மாமல்லபுரத்தில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய், அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளை தீவிரப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், கட்சியின் தினசரிப் பணிகளை ஒருங்கிணைக்க 28 பேர் கொண்ட புதிய நிர்வாகக் குழுவை தவெக தலைவர் விஜய் நியமித்துள்ளார். நிர்வாகக் குழுக் கூட்டம் சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. பொதுச் செயலாளர் என். ஆனந்த் தலைமை வகித்தார்.
தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இணைப் பொதுச் செயலாளர் சிடிஆர்.நிர்மல்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில், கரூர் சம்பவம் குறித்த விசாரணை, சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், தமிழக அரசு வழிகாட்டுதல்களை வெளியிட்ட பின்னர் விஜய்யின் சுற்றுப் பயணத்தை தொடங்கவும் முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக வெற்றிக் கழகத்தின் படைக்கலன்களாக நீங்கள் இருக்கையில், நம்மைக் காக்கும் கவசமாக மக்கள் இருக்கையில், அவர்களுடன் நமக்குள்ள உறவையும், அவர்களின் குரலாகத் தொடரும் நம் வெற்றிப் பயணத்தையும் எவராலும் தடுக்க இயலாது. சூழ்ச்சிகளாலும், சூதுகளாலும் நம்மை வென்றுவிடலாம் என்று கனவு காணும் எதிரிகளும் இதை உணர்ந்தே உள்ளனர்.
நமது அடுத்த அடியை இன்னும் நிதானமாகவும், தீர்க்கமாகவும் நாம் எடுத்துவைக்க வேண்டும். இத்தகைய சூழலில் கட்சியின் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து விவாதிக்க வேண்டும். இவை குறித்து முடிவுகள் எடுக்கும் பொருட்டு பொதுக்குழுவின் சிறப்புக் கூட்டத்தை கூட்ட முடிவு செய்துள்ளோம்.
அதன்படி, தவெக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் மாமல்லபுரத்தில் நவம்பர் 5-ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. வாருங்கள் சிறப்புப் பொதுக்குழுவில் கூடுவோம். வருங்காலம் நமதென்று காட்ட தீர்க்கமாகத் திட்டமிடுவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது..







