ஓடும் ரயிலில் பயணியிடம் நகை திருட்டு – சிறுவனால் சிக்கிய தம்பதி.!!

நெல்லை மாவட்டம் மருதகுளம் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கி ( வயது 57) சம்பவத்தன்று இரவு தனது மனைவி, மகன், மகளுடன் பொள்ளாச்சியில் இருந்து ரயிலில் கோவைக்கு வந்து கொண்டிருந்தார். அந்த ரயில் போத்தனூர் அருகே வந்த போது இசக்கியின் மனைவி தலையில் வைத்து படுத்து இருந்த பேக்கை ஒரு சிறுவன் நைசாக திருட முயன்றான். அதை பார்த்த இசக்கி சக பயணிகளின் உதவியுடன் அந்த சிறுவனை மடக்கி பிடித்தார். அப்போது அந்த சிறுவனுக்கு ஆதரவாக வாலிபர் ஒருவர் இசக்கியிடம் தகராறில் ஈடுபட்டார். உடனே இசக்கி அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினார். இதில் ஆத்திரமடைந்த வாலிபர் இசக்கியை தாக்கி விட்டு சிறுவனுடன் இறங்கி தப்பி சென்று விட்டார். இதனால் சந்தேகம் அடைந்த இசக்கி தங்களின் உடமைகளை சோதனை செய்து பார்த்தபோது பையில் இருந்த 6 பவுன் தங்க நகைகளை காணவில்லை. இதற்கிடையில் ரயில்வே ஊழியர்கள் வந்து ரயிலை நிறுத்தியது குறித்து இசக்கியிடம் விசாரணை நடத்தினர். அதன்பிறகு அந்த ரயில் 17 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டது.. இதையடுத்து நகை திருட்டு தொடர்பாக இசக்கி போத்தனூர் ரயில்வே பாதுகாப்பு படை போலீசில் புகார் செய்தார் .அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் நகை திருட்டில் ஈடுபட்டது போத்தனூர் செட்டிபாளையம் பாரதிநகரை சேர்ந்த உஜாத் அலி (வயது 31) அவரது மனைவி சத்யா (வயது 25) அவர்களது உறவினரான 12 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது. உடனே அந்த 3 பேரையும் போலீசார் கைது செய்தனர் நகை மீட்கப்பட்டது..