பி.எம்.ஸ்ரீ திட்டம்… ஓகே சொன்ன கேரள அரசு.!!

த்திய அரசின் பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய கேரள அரசு எடுத்த முடிவுக்கு, தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து வரும் சிபிஎம், பாஜகவுடன் இரகசிய கூட்டு வைத்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி, போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது.

இதற்கு பதிலளித்த கேரளக் கல்வித் துறை அமைச்சர் சிவன்குட்டி, பி.எம்.ஸ்ரீ திட்டத்தின் கீழ் எந்த நடவடிக்கையும் தொடங்கப்படவில்லை என்றும், பாடத்திட்டம் தொடர்பாக எந்த ஒப்பந்தமும் கையெழுத்திடப்படவில்லை என்றும் தெளிவுபடுத்தினார்.

அவர் மேலும் கூறுகையில், “மத்திய அரசின் நிதியை பெறுவதற்காகவே ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடிவெடுத்தோம். ஒப்பந்தத்தை ஏற்கவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்தது,” என்றார்.

காங்கிரஸை விமர்சித்த அவர், “காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் அனைத்தும் ஏற்கெனவே கையெழுத்திட்டுவிட்டன. எனவே, அவர்கள் முதலில் தங்கள் சொந்த முதல்வர்களிடம் பேச வேண்டும்,” என்று பதிலடி கொடுத்தார்.

பி.எம்.ஸ்ரீ திட்டத்தின் கீழ் மாநிலத்தின் கல்வி மதிப்புகளுக்கு ஏற்ற அம்சங்களை மட்டுமே கேரளா அமல்படுத்தும் என்றும், எல்லா வியூகங்களையும் பொது வெளியில் தெரிவிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் கேரளாவை அடுத்து தமிழகமும் பிஎம்.ஸ்ரீ திட்டத்தை ஒப்புக்கொள்ள முடிவெடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.