அரட்டை மெசஞ்சர் (Arattai Messenger) ஆப் மூலம் மெட்டாவுக்கு சொந்தமான வாட்ஸ்அப்பிற்கு கடுமையான போட்டியை உருவாக்கிய ஜோஹோ (Zoho) நிறுவனம், இப்போது இந்தியாவின் யு.பி.ஐ.
பணப்பரிவர்த்தனை சந்தையையே கலக்க வருகிறது. ஆம்! உங்க அன்றாட டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தை மாற்றியமைக்க ஜோஹோ நிறுவனம் ‘Zoho Pay’ என்ற யு.பி.ஐ அடிப்படையிலான நுகர்வோர் கட்டணத் தளத்தை உருவாக்கி வருகிறது. இந்தியாவின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை என்பது இன்று உலகின் மிக சுறுசுறுப்பான சந்தை. இதில், பேடிஎம், ஃபோன்பே, கூகுள் பே போன்ற ஜாம்பவான்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இவர்களுடன் ஜோஹோ நேரடியாகப் போட்டிக்கு வருகிறது.
ஜோஹோ நிறுவனத்திற்கு ஏற்கனவே பெரிய, விசுவாசமான பயனர் தளம் இருப்பதால், இந்த புதிய ஆப் சந்தையின் விதிகளை மாற்றி அமைக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜோஹோ Pay என்பது தனியான செயலியாக வரும் அதே வேளையில், அதன் மிக முக்கியமான அம்சம் என்ன தெரியுமா? அது அரட்டை மெசஞ்சருடன் ஒருங்கிணைக்கப்பட உள்ளது. இதன்மூலம் அரட்டை பயனர்கள் இனி தகவல்தொடர்புக்கு ஒரு ஆப் பணம் அனுப்ப இன்னொரு ஆப் என்று அலையத் தேவையில்லை. அரட்டை மெசஞ்சருக்குள்ளேயே எல்லாவற்றையும் முடித்துக் கொள்ளலாம். இது ஒரு கல்லில் 2 மாங்காய் அடிப்பதைப் போன்றது. ஏனெனில், வாட்ஸ்அப்பிலும் யு.பி.ஐ. அம்சம் இருந்தாலும், ஜோஹோவின் இந்த ஒருங்கிணைப்பு வாட்ஸ்அப்பிற்கு பெரிய போட்டியாக அமையும்.
ஜோஹோ Pay மூலம் நீங்கள் என்னவெல்லாம் செய்யலாம்? நண்பர்களுக்குப் பணம் அனுப்பலாம், பெறலாம். கடைகளுக்கு பரிவர்த்தனைகளை தொடங்கலாம். பில்களைச் செலுத்தலாம். தற்போதைக்கு, ஜோஹோ Pay செயலி அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதற்கு முன் சோதனைக் கட்டத்தில் (Closed Testing) உள்ளது. இருப்பினும், அடுத்த காலாண்டில், இந்த ஆப் iOS மற்றும் ஆண்ட்ராய்டு பயனர்களுக்குக் கிடைக்கும் என்று பல தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை வானில் புதிய பறவை உயரப் பறக்கத் தயாராகிறது. ஜோஹோ பயனர்கள் இனி ஒரே ஆப் மூலம் பேசுவதையும், பணம் அனுப்புவதையும் முடித்துக் கொள்ளலாம்.






