சபரிமலை ஐயப்பன் கோவிலில் மாயமான 4.5 கிலோ தங்கம் – எங்க போச்சு..?

கேரளாவின் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் சன்னிதானத்தில் உள்ள 2 துவார பாலகர் சிலைகளில் இருந்து சுமார் 4 கிலோ தங்கம் மாயமானதாக புகார் எழுந்தது கேரளாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சிலைகளை செப்பனிடுவதற்காக சென்னைக்கு கொண்டு வரப்பட்டு மீண்டும் கோவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், துவார பாலகர் சிலைகளின் தங்க முலாம் பூசப்பட்ட அடிப்பிடங்கள் காணாமல் போனதாக தங்கத் தகடுகளை புதுப்பிக்க இடைத்தரகராக செயல்பட்ட உன்னிகிருஷ்ணன் போற்றி என்பவர் புகார் அளித்த நிலையில் அவை அவரின் சகோதரி வீட்டில் இருந்து மீட்கப்பட்டன. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள கேரளா உயர் நீதிமன்றம் சிறப்பு விசாரணைக் குழுவை நியமித்துள்ளது.

உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் இடைத்தரகராக செயல்பட்ட உன்னிகிருஷ்ணன் மற்றும் தேவசம்போர்டு துணை ஆணையர் முராரி பாபு, திருவிதாங்கூர் தேவசம் வாரிய செயலர் ஜெயஸ்ரீ, செயல் அதிகாரி சதீஷ், நிர்வாக அதிகாரி ஸ்ரீகுமார், முன்னாள் திருவாபரணம் ஆணையர் கே.எஸ். பைஜு உள்ளிட்ட 9 அதிகாரிகள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேவசம் போர்டு அதிகாரிகளே இந்த கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்டு இருப்பது அம்பலமாகி இருக்கிறது. இதை எடுத்து 9 அதிகாரிகள் மீதும் கைது நடவடிக்கை உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக தெரியவந்துள்ளது . இந்த வழக்கில் சபரிமலை மூத்த தந்திரி கண்டரரு ராஜீவருவை சேர்க்க கூட்டு சதி நடந்ததும் தெரிய வந்துள்ளது.

சபரிமலையில் தங்கம் திருடப்பட்ட விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இந்தத் தகடுகள் சென்னையில் உள்ள ஸ்மார்ட் கிரியேஷன்ஸ் என்ற நிறுவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு 49 நாட்களுக்குப் பிறகு மீண்டும் சபரிமலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் இதயனை தனியாக செய்திருக்க வாய்ப்பில்லை வாரிய உறுப்பினர்களின் அழுத்தம் அல்லது கூட்டு சதி இருந்ததா என்பது குறித்தும் விசாரிக்க வேண்டும் என விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. சபரிமலையில் தங்கம் மாயமான விவகாரம் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பெரும் சிக்கலை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது..