டெல்லி: இப்போது உலகளவில் ரேர் எர்த் மெடல் ஏற்றுமதியில் சீனா தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சீனாவின் ஆதிக்கத்தை முறியடிக்க இந்தியா இப்போது ஒரு மிக முக்கியமான திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.
மின்சார வாகனங்கள், காற்றாலைகள் மற்றும் மின்னணு சாதனங்கள் என நவீனத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும் பல்வேறு பொருட்களுக்கும் இந்த ரேர் எர்த் மெடல்கள் முக்கியமாகத் தேவைப்படுகிறது. இப்போது உலக நாடுகளுக்குத் தேவைப்படும் ரேர் எர்த் மெடல்களில் பெரும்பகுதியைச் சீனா தான் உற்பத்தி செய்கிறது. சீனா திடீரென எதாவது கட்டுப்பாட்டை விதித்தால் உலகெங்கும் சிக்கலை ஏற்படுத்தும் நிலையே இருக்கிறது.
இதற்கிடையே ரேர் எர்த் மெடல் ஏற்றுமதியில் சீனாவை மட்டும் நம்பி இருக்கக்கூடாது என்பதால் இந்தியா இந்த விவகாரத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது. இதற்காக ரூ. 7,300 கோடி மதிப்பில் முக்கிய திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் செலவின நிதிக்குழு (EFC), இந்தத் திட்டத்திற்குச் சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இந்த திட்டத்தின் கீழ் இந்தியாவில் ரேர் எர்த் மெடல் வெட்டி எடுக்கும் மையங்களையும் அதை விநியோகிக்கும் நெட்வொர்க்குகளை அமைக்கும் நிறுவனங்களுக்கு அரசு மானியம் வழங்கும்.
ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள ரூ.7300 கோடியில் மூலதனச் செலவுகளுக்காக ரூ. 6,500 கோடி ஒதுக்கப்படும். மேலும், ஆபரேஷங் செயல்பாடுகளுக்காக ரூ. 800 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டம் விரைவில் அமைச்சரவையின் ஒப்புதலுக்காகச் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாகத் துறை சார்ந்த அதிகாரிகள் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “ரேர் எர்த் மெடல் உற்பத்தியை அதிகரிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சலுகைகளால் பல நிறுவனங்கள் இதில் முதலீடு செய்யும். இதன் மூலம் 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் ரேர் எர்த் மெடல் உற்பத்தி 6,000 டன்களை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யப் போதுமானதாக இருக்கும்” என்றார்.
உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க நிதிச் சலுகைகளை மத்திய அரசு கொண்டு வர உள்ளதாகச் சமீபத்தில் தான் மத்திய உருக்கு மற்றும் கனரகத் தொழில்கள் துறை அமைச்சர் எச்.டி. குமாரசாமி தெரிவித்திருந்தார். ரேர் எர்த் மெடல் வர்த்தகத்தில் இந்தியா ஒரு முக்கிய நாடாக மாற இது உதவும் என்றும் ஹெச்.டி. குமாரசாமி கூறியிருந்தார். இந்தச் சூழலில் தான் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இந்தச் சலுகைகள் முதற்கட்டச் செலவுகளைச் சமாளிக்க நிறுவனங்களுக்கு உதவும். மேலும், ரேர் எர்த் மெடல் எடுக்கப் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய உபகரணங்களுக்கான வரிகளைக் குறைக்கப்படும்.. திடீரென விதிக்கப்படும் கட்டுப்பாடுகளால் இந்தியா பாதிக்கப்படாமல் இருப்பதையும் இது உறுதி செய்யும்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் வரி மிரட்டல் விடுத்தபோது கடந்த ஏப்ரல் மாதம் திடீரென ரேர் எர்த் மெடல் ஏற்றுமதிக்குச் சீனா கட்டுப்பாடுகளை விதித்து. சிறப்பு ஏற்றுமதி உரிமங்கள் இருந்தால் மட்டுமே ஏற்றுமதி செய்ய முடியும் எனக் கூறிவிட்டது. இது இந்தியா உட்பட உலகெங்கும் வாகனத் தொழில்துறை முடங்கும் சூழல் ஏற்பட்டது. மீண்டும் அதுபோன்ற நிலை ஏற்படக்கூடாது என்பதற்காகவே சீனா இந்த நடவடிக்கையை எடுக்கிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை மின்சார வாகனம் மற்றும் காற்றாலை துறைகளுக்கே ரேர் எர்த் மெடல் அதிகம் தேவைப்படுகிறது. 2025ல் 4,010 மெட்ரிக் டன் ரேர் எர்த் மெடல் தேவைப்படுகிறது. 2030 ஆம் ஆண்டிற்குள் மொத்தத் தேவை 6000 முதல் 8,220 மெட்ரிக் டன்களாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.









