மத்தியப் பிரதேசம் சிந்த்வாரா மாவட்டத்தில் 11 குழந்தைகள் இருமல் மருந்தைக் குடித்ததன் பின்னர் சிறுநீரகம் செயலிழந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல் அண்டை மாநிலமான ராஜஸ்தானின் சிகாரில் இரண்டு குழந்தைகள் இதே காரணத்தால் உயிரிழந்தனர்.
இந்த நிலைமையையடுத்து, இரு மாநிலங்களிலும் கோல்ட்ரிப் உட்பட 15க்கும் மேற்பட்ட மருந்துகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் உயிரிழந்த குழந்தைகளில் பலர் பராசியாவில் உள்ள குழந்தை நல மருத்துவர் பிரவீன் சோனியின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்தனர்.
குழந்தைகளுக்கு ஆபத்தான மருந்தை பரிந்துரைத்ததாகக் கூறி அவர் கைது செய்யப்பட்டார். அதேசமயம் அவர் பணியிடை நீக்கப்பட்டு, தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆய்வக அறிக்கையில் கோல்ட்ரிப் என்ற அந்த இருமல் மருந்தில் டை-எத்திலீன் கிளைக்கால் எனப்படும் மிகுந்த நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருள் 48.6% அளவில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தப் பொருள் உடலுக்குள் சென்றால் சிறுநீரகத்தைக் கடுமையாக பாதிக்கும் தன்மை கொண்டது.
இதையடுத்து மருத்துவர் பிரவீன் சோனி மட்டுமின்றி, கோல்ட்ரிப் தயாரித்த தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஸ்ரேசன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு (FIR) செய்யப்பட்டுள்ளது.





