டெல்லி: ஆப்கானிஸ்தானின் தாலிபான் அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் கான் முத்தகி, அக்டோபர் 9 ஆம் தேதி இந்தியாவுக்கு வருகிறார்.
இந்தப் பயணத்தை பாகிஸ்தான் உன்னிப்பாக கவனித்து வருகிறது.
கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்டில் தாலிபான் ஆப்கானிஸ்தானின் ஆட்சியை கைப்பற்றிய பிறகு, அந்நாட்டு உயர் அதிகாரி ஒருவர் டெல்லிக்கு வருவது இதுவே முதல்முறையாகும். இந்தியா-தாலிபான் உறவில் இது ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கும் என சொல்லப்படுகிறது. அமீர் கான் முத்தகிக்கு அக்டோபர் 9 முதல் 16 ஆம் தேதி வரை டெல்லிக்கு பயணிக்க சர்வதேச பயணக் கட்டுப்பாடுகளில் இருந்து தற்காலிக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்திய தூதரக வட்டாரங்கள் இந்த பயணத்திற்காக பல மாதங்களாக தயாராகி வருகின்றன. கடந்த ஜனவரி மாதம் முதல், இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும் மூத்த வெளியுறவு சேவை அதிகாரி ஜே.பி. சிங் ஆகியோர், முத்தகி மற்றும் பிற தாலிபான் தலைவர்களுடன் பல சுற்றுகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்த சந்திப்புகள் துபாய் உள்ளிட்ட நடுநிலை நாடுகளில் நடைபெற்றன.
கடந்த மே 15 அன்று பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்குப் பிறகு, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் முத்தகியுடன் தொலைபேசியில் உரையாடினார். இது 2021-க்குப் பிறகு நடந்த முதல் அமைச்சரவை அளவிலான தொடர்பு ஆகும். முன்னதாக கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில், காஷ்மீரில் நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தாலிபான் கண்டித்தது. காபூலில் இந்திய அதிகாரிகளுடன் நடந்த உயர்மட்ட சந்திப்பின் போது இந்த கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
முத்தகியின் இந்த பயணம் பாகிஸ்தானுக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. ஆப்கானிஸ்தான் மீது தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்த பாகிஸ்தான் நீண்ட காலமாக முயற்சி செய்து வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் 80,000 க்கும் மேற்பட்ட ஆப்கான் அகதிகளை பாகிஸ்தான் திருப்பி அனுப்பியதன் மூலம் தாலிபானுடனான உறவுகளில் விரிசல் ஏற்பட்டது. இந்த சூழல் இந்தியாவுக்கு ராஜதந்திர ரீதியாக அதிக வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
பாகிஸ்தானை நெருக்கமாக கண்காணிக்கவும், இந்தியாவுக்கு எதிராக அந்நாட்டு பயங்கரவாதிகள், அரசு போடும் திட்டங்களை அறிந்துக்கொள்ளவும் நமக்கு நெருக்கமான நட்பு தேவை. அது ஆப்கானிஸ்தானாக இருந்தால் சிறப்பானதாக இருக்கும். ஏனெனில் ஆப்கானிஸ்தான் பொருளாதார ரீதியாக கடுமையாக பின்னடைவை எதிர்கொண்டிருக்கிறது. கட்டமைப்பு, மறுமலச்சி, மீட்சிக்கு அதிக நிதியும், சர்வதேச ஆதரவும் அந்நாட்டுக்கு தேவை. இந்த வாய்ப்பை நாம் பயன்படுத்திக்கொண்டு ஆப்கானுடன் நட்பாகலாம்.
இதன் மூலம் இரு நாடுகளுக்கும் பரஸ்பர பலன்கள் கிடைக்கும். ஆப்கானிஸ்தானுடன் இந்தியா நட்பு உறவை வளர்ப்பது என்பது, பாகிஸ்தானை தொடர்ந்து கண்காணிக்க நாம் மேற்கொள்ளும் யுக்தி என்பது குறிப்பிடத்தக்கது.