வீட்டில் கதறி அழும் விஜய்… மீண்டும் கரூர் கிளம்புகிறாரா..?

சென்னை: கரூர் பிரச்சார கூட்டத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும் நிவாரணம் வழங்கப்படுவதாக தவெக தலைவர் விஜய் ஏற்கனவே அறிவித்துள்ளார்..

இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் வழங்க கரூர் செல்ல திட்டமிட்டிருப்பதாக கூறப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக சில உறுதிப்படுத்தப்படாத தகவல்களும் வட்டமடிக்கின்றன.

கரூரில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்துள்ளனர்.. தற்போது சுகுணா என்ற ஒரு பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில் கரூர் பலி எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது..

கரூர் சம்பவம் குறித்து விஜய் வெளியிட்டிருந்த அறிக்கையில், இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன். தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும், துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன். நம் உறவுகளை இழந்து தவிக்கும் பெருந்துயர்மிகு மனநிலையில், என் மனம் படுகிற வேதனையை எப்படி சொல்வதென்றே தெரியவில்லை என்று பதிவிட்டிருந்தார்.

அத்துடன், நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும் நிவாரணம் வழங்கப்படுவதாக விஜய் அறிவித்தார். மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்து நேரில் ஆறுதல் சொல்வதற்காகவும், நிதியுதவியை வழங்குவதற்காகவும் எப்போது கரூர் செல்வது? என்பது தொடர்பான ஆலோசனையை தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், சென்னையில் நடத்தினார்.

தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டார். பிறகு, விஜய் கரூர் செல்வதற்காக அனுமதி கேட்டு தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் போலீசிலும் மனு வழங்கியதாக தெரிகிறது. ஆனால் இதற்கு காவல்துறை அனுமதி மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

காரணம், ஏற்கனவே பிரச்சாரத்துக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளையே தவெகவினர் சரியாக பின்பற்றிவில்லை என்று குற்றச்சாட்டு வலுவாக எழுந்துள்ளது..

அதுமட்டுமல்ல, கரூர் துயரத்திலிருந்து அங்குள்ளவர்கள் தவெக மீது கொதிப்பிலும், கோபத்திலும், உள்ளபோது, விஜய்யின் இந்த வருகை, அவர்களை மேலும் கொதிப்படைய செய்யலாம், இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டுவிடலாம் என்றுகூட கருதி, போலீசார் விஜய் வருகைக்கு மறுத்திருக்கலாம் என்கிறார்கள்.

மேலும், மருத்துவமனை வளாகத்தில் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சியினர் என மொத்த பேரும் கூடியிருக்கும்போது, இப்போது விஜய் அங்கு வந்தால், மறுபடியும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு, நிலைமை மோசமடையக்கூடும் என்பதாலும், காவல்துறை அனுமதி மறுத்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.

தவெகவின் முக்கிய நிர்வாகிகள் மீது வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில், மற்றொருபுறம் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையமும் அமைக்கப்பட்டு, அந்த ஆணையம் தன்னுடைய விசாரணையை துவங்கியிருக்கிறது..

இதற்கு நடுவில், சிபிஐ விசாரணை கேட்டு தவெக தொடுத்த வழக்கு, தவெக அங்கீகாரத்தை ரத்து செய்யக்கூடிய வழக்கு என இரண்டுமே இன்றைய நாளில் விசாரணைக்கு வருகிறது.

இதனையெல்லாம் கருத்தில் கொண்டும், போலீசார் அனுமதி மறுத்திருக்கலாம் என்கிறார்கள்.. எனினும் கரூர் செல்வதற்கான அனுமதியை விஜய் தரப்ப தொடர்ந்து பெறும் முயற்சியில் ஈடுபட்டுவருவதாக தெரிகிறது.

ஏற்கனவே, விஜய்க்கு எதிராக ஆளும் கட்சி செயல்பட்டு வருவதாக முணுமுணுப்புகள் உள்ள நிலையில், கரூருக்கு விஜய் செல்ல அனுமதி காவல்துறை மறுத்திருப்பதாக கசிந்திருக்கும் தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.