கரூர் பெரும் துயர சம்பவம்… கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 41 ஆக உயர்வு- சோகத்தில் விஜய்…

தவெக தலைவர் விஐய் கலந்து கொண்ட கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிர் பலி தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கரூர் பகுதியில் மதியம் 12 மணிக்கு விஜய் பேசுவார் என அறிவிக்கப்பட்ட நிலையில்,, விஜய் மாலை 7.30 மணிக்கே கரூர் பகுதியை வந்தடைந்தார். அதிகாலையில் இருந்து திரண்டு வந்த ரசிகர்கள், தொண்டர்கள் மதிய வெயிலில் உணவு, தண்ணீர் இன்றி காத்திருந்தனர்.

இதனால் சோர்வு, நீரிழிவு ஏற்பட்டது. விஜய்யின் வாகனம் வந்ததும், கூட்ட நெரிசல் அதிகரித்தது. சிலர் மரத்தில் ஏறி பார்க்க முயன்றபோது கிளைகள் உடைந்து விழுந்தது, மின்சாரம் துண்டிக்கப்பட்டது, பிரச்சாரப் பாடல் பாடப்பட்டதும் நெரிசலை தூண்டியதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதனால் கூட்டம் முன்னோக்கி அலைந்து, பலர் சிக்கி மூச்சுத்திணறி இறந்தனர்.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் முதலில் 2 பேர் பலி என தகவல் வெளியான நிலையில் அடுத்தடுத்து உயிர்பலி அதிகரித்தது. அந்த வகையில் 39 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சு திணறி பலியானார்கள். 50க்கும் மேற்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்பட்டது. அதன் படி நேற்று மதியம் ஒருவர் இறந்த நிலையில் இன்று காலை கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூதாட்டி சுகுணா (வயது 65) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதில் மொத்தமாக 10 குழந்தைகள், 17 பெண்கள் உட்பட பலர் அடங்குவர். மேலும் 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தமிழகத்தில் இதுவரை ஏற்பட்ட மிகப் பெரிய நெரிசல் சம்பவமாக அமைந்துள்ளது.

உயிரிழந்தவர்களில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த ஐந்து பேரும் அடங்குவர். கரூர் அரசு மருத்துவமனையில் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தை தொடர்ந்து தவெக கரூர் மாவட்ட செயலாளர், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், சிடி நிர்மல்குமார் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே இந்த சம்பவம் திட்டமிட்ட சதி என கூறி தவெக நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது. சிபிஐ விசாரணையையும் கோரியுள்ளது.