முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று மதியம் சென்னை அடையாறில் உள்ள அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் உரையாடியுள்ளார்.
அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் நீக்கப்பட்டவர்கள் அத்தனை பேரும் மீண்டும் இணைக்கப்பட வேண்டும், ஒருங்கிணைந்த பலமான அதிமுக உருவாக்கப்பட வேண்டும், அப்போதுதான் 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி அடைய முடியும் என்று கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.
அதற்கு முன்பாகவே சில மாதங்களாக எடப்பாடி பழனிச்சாமிக்கும் அவருக்கும் இடையே பனிப்போர் நிலவி வந்தது. எடப்பாடி பழனிச்சாமியின் பல்வேறு ஆலோசனை கூட்டங்களை அவர் புறக்கணித்து இருந்தார். இந்த சூழலில் சமீபத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்து அதிமுக ஒன்றிணைய வேண்டும் அதற்கான முயற்சிகளை 10 நாட்களுக்குள் மேற்கொள்ள வேண்டும் என்று அதிமுக தலைமைக்கு கெடு விதித்திருந்தார். இதனால் கோபமான அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செங்கோட்டையன் மீது ஒழுங்கு நடவடிக்கையை மேற்கொண்டார். செங்கோட்டையன் வகித்து வந்த அனைத்து கட்சி பதவிகளிலிருந்தும் அவரை நீக்கி உத்தரவு பிறப்பித்தார்.
இதன் பின்னர் செங்கோட்டையன் டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்து விட்டு திரும்பினார். செங்கோட்டையன் விதித்திருந்த பத்து நாட்கள் கெடு முடிவடைந்த நிலையில் அடுத்து அவர் என்ன நடவடிக்கையில் ஈடுபடுவார் என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தி வந்தது. இந்த சூழலில் இன்றைய தினம் மதியம் அமமுக பொதுச் செயலாளர் டி டி வி தினகரனை சென்னை அடையாறு இல்லத்தில் சென்று சந்தித்து உரையாடி இருக்கிறார்.
எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் வேட்பாளராக இருக்கின்ற வரை தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்க மாட்டேன் என்று கூறி அந்த கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் சமீபத்தில் விலகினார். தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அவர் செய்தியாளர்களை சந்தித்து வந்தார். முக்கியமாக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியதற்கு நயினார் நாகேந்திரனின் அணுகுமுறையை காரணம் என்று அவர் குற்றம் சாட்டினார்.
2026 சட்டமன்ற தேர்தலில் அமமுக எந்த கூட்டணியில் அங்க வகிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அப்போது டிசம்பர் மாதத்திற்குள் நல்ல செய்தி வரும் என்று டிடிவி தினகரன் கூறியிருந்தார்.
இந்த சூழலில் தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று டிடிவி தினகரனை அவரது அடையார் இல்லத்தில் சந்தித்து சுமார் ஒன்றரை மணி நேரம் ஆலோசனை நடத்தினார். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தினகரனை மீண்டும் கொண்டுவரும் முயற்சியில் அண்ணாமலை ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் செங்கோட்டையன் டிடிவி தினகரன் தேடிச்சென்று சந்தித்திருப்பது அமமுக, அதிமுக வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அதிமுக ஒன்றுபட வேண்டும் என்று பேசியதற்கே கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கிய எடப்பாடி பழனிச்சாமி தற்போது டிடிவி தினகரனை நேரடியாக சென்று சந்தித்ததற்கு செங்கோட்டையன் மீது என்ன நடவடிக்கை எடுப்பார் என்ற விவாதமும் தற்போது எழுந்துள்ளது. தற்போது செங்கோட்டையனிடம் எஞ்சி நிற்பது அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு மட்டுமே. அதிலிருந்தும் அவரை நீக்குவாரா? ஒருவேளை நீக்கினால் அதற்கு செங்கோட்டையன் ஆதரவாளர்கள் என்ன எதிர் வினையாற்றுவார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.