3ம் உலகப்போர் மூளும் அபாயம் … அத்துமீறும் ரஷ்யா… உள்ளே வந்த நேட்டோ-பதற்றத்தில் ஐரோப்பிய நாடுகள்.!!

தாலின்: எஸ்டோனிய வான்பரப்பில் மூன்று ரஷ்ய போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்ததாகவும், அதை நேட்டோ படைகள் இடைமறித்தாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கெனவே ஜார்ஜியாவில் ரஷ்ய ட்ரோன்கள் நுழைந்திருந்த சம்பவம் பேசுபொருளாகியிருந்த நிலையில், தற்போது எஸ்டோனியாவுக்குள் ரஷ்ய போர் விமான நுழைந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

எஸ்டோனியா என்பது, ரஷ்யாவின் பக்கத்து நாடாகும். உக்ரைனக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்றாலும் கூட, ஏன் இந்த நாட்டின் எல்லைக்குள் ரஷ்ய ராணுவ விமானங்கள் நுழைந்தன என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. அதேபோல உக்ரைன் போரை ரஷ்யா கைவிடாத நிலையில், போரை விரிவுப்படுத்த நேட்டோவை உள்ளே இறக்கிவிட்டிருக்கிறது அமெரிக்கா. எனவேதான் போலாந்து, எஸ்டோனியா உள்ளிட்ட நாடுகள் மூலம் நேட்டோ தயாராகி வருகிறது.

போர் விமானங்களின் அத்துமீறலை, எஸ்டோனிய வெளியுறவு அமைச்சகம் மற்றும் நேட்டோ செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினர். ரஷ்ய விமானங்கள் இறுதியில் தப்பி ஓட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று எஸ்டோனிய பிரதமர் கிரிஸன் மிக்கல் கூறியிருக்கிறார். ரஷ்ய விமானங்களுக்கு எதிராக நேட்டோ எடுத்த நடவடிக்கையை இந்த அமைப்பின் பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே பாராட்டியிருக்கிறார்.

அனுமதியின்றி எஸ்டோனிய வான்பரப்பில் நுழைந்த மூன்று MiG-31 ரக விமானங்கள், சுமார் 12 நிமிடங்கள் எல்லைக்குள் சுற்றிக்கொண்டிருந்தன என்று அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேட்டோவின் ஈஸ்டர்ன் சென்ட்ரி நடவடிக்கையின் கீழ் எஸ்டோனியாவில் நிறுத்தப்பட்டுள்ள இத்தாலிய F-35 விமானங்கள், ஸ்வீடன் மற்றும் ஃபின்லாந்து விமானங்களுடன் இணைந்து இந்த அத்துமீறலுக்கு பதிலடி கொடுத்ததாக நேட்டோ கூட்டுப்படைகளின் தலைமையகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தை கண்டிக்கும் வகையில், எஸ்டோனிய வெளியுறவு அமைச்சகம் ரஷ்யாவின் தூதரை வரவழைத்தது தனது அதிருப்தியை தெரிவித்திருக்கிறது. இந்த சம்பவம் நடந்து சில மணி நேரங்களில், போலாந்தின் எல்லையிலும் ரஷ்ய போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. போலந்தின் எல்லைக் காவல் துறை, இரண்டு ரஷ்ய போர் விமானங்கள் போலந்து நிறுவனமான பெட்ரோபால்டிக் நிறுவனத்திற்குச் சொந்தமான பால்டிக் கடல் எண்ணெய் தளத்தின் மீது தாழ்வான உயரத்தில் பறந்ததாக கூறியிருக்கிறது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, நேட்டோவின் ஆலோசனையை எஸ்டோனியா கோரியிருக்கிறது. இந்த அத்துமீறலை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று அந்நாட்டு பிரதமர் மிக்கல் விவரித்தார். ஐரோப்பிய நாடுகளில் தொடர்ந்து ரஷ்யா அத்துமீறலில் ஈடுபட்டு வரும் நிலையில், வடக்கு அட்லாண்டிக் கவுன்சில் அடுத்த வார தொடக்கத்தில் இந்த விவகாரத்தை விரிவாக விவாதிக்கக் கூடும் என்று நேட்டோ செய்தித் தொடர்பாளர் ஆலிசன் ஹார்ட் கூறியிருக்கிறார்.

குறிப்பாக நேட்டோ அமைப்பின் பிரிவு 4ஐ பயன்படுத்துவது தொடர்பாக விவாதங்கள் எழலாம். அதாவது நேட்டோவில் உறுப்பினராக உள்ள நாடுகளுக்கு சிக்கல எழும்போது, மொத்த நேட்டோ நாடுகளும் உதவி செய்ய இந்த பிரிவு 4 பயன்படுகிறது. கடந்த வாரம் ரஷ்ய ட்ரோன்கள் மற்றும் போர் விமானங்கள் போலந்தின் வான்பரப்பில் நுழைந்தபோது, போலந்தும் இதேபோன்ற ஆலோசனையைத் தொடங்கியது.

“ரஷ்யா இந்த ஆண்டு ஏற்கனவே நான்கு முறை எஸ்டோனியாவின் வான்பரப்பை மீறியுள்ளது, இது ஏற்றுக்கொள்ள முடியாதது. ஆனால் இன்று நடந்த சம்பவம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு துணிச்சலானது. ரஷ்யாவின் அதிகரித்து வரும் எல்லை மீறல்களையும், வளர்ந்து வரும் ஆக்ரோஷத்தையும், அரசியல் மற்றும் பொருளாதார அழுத்தத்தை விரைவாக எதிர்கொள்ள வேண்டும். அத்துமீறலை ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதில் நாங்கள் தெளிவாக உள்ளோம். நேட்டோவின் ஒற்றுமையைக் குலைக்க ரஷ்யா முயற்சிக்கிறது, ஆனால் அவை அதற்கு நேர்மாறான விளைவையே பெறுகின்றன” என்று எஸ்டோனிய வெளியுறவு அமைச்சர் மார்கஸ் சாஹ்னா கூறியிருக்கிறார்.

ரஷ்யா எப்போது சிக்கும்? போரை எப்படி விரிவுப்படுத்துவது? என்று அமெரிக்கா கண் கொத்தி பாம்பாக பார்த்துக்கொண்டிருக்கும் நேரத்தில், ரஷ்யாவின் சிறு தவறு கூட பெரிய பாதிப்புகளை ஏற்படுத்திவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.