மதுரை: ஜிஎஸ்டி முறையில் மத்திய அரசு செய்த சீர்திருத்தம் மூலம் பொருளாதார வளர்ச்சி மிகச் சிறப்பாக இருக்கும் என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மேலும், வரி சீர்திருத்தம் மூலம் ரூ.2 லட்சம் கோடி வரிப்பணம் மீண்டும் மக்களிடமே போய் இருப்பதாகவும் இது பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
மத்திய அரசு கடந்த 2017ம் ஆண்டு ஜிஎஸ்டி முறையைக் கொண்டு வந்தது. மாநிலத்திற்கு மாநிலம் இருந்த வரிகள் நீக்கப்பட்டு, அவை அனைத்தும் ஜிஎஸ்டி என்ற ஒரே வரி விதிப்பு முறையாகக் கொண்டு வரப்பட்டது. அதில் 5, 12, 18, 28 ஆகிய நான்கு பிரிவுகளில் வரி வசூலிக்கப்பட்டது. இந்தச் சூழலில் தான் இம்மாதத் தொடக்கத்தில் கூடிய ஜிஎஸ்டி கவுன்சில், வரி அமைப்பில் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தது.
அதில் 12 மற்றும் 18% வரிகள் நீக்கப்பட்டன. 12%ல் இருந்த பெரும்பாலான பொருட்கள் 5%க்கு கொண்டு வரப்பட்டன. இதன் மூலம் பல்வேறு அத்தியாவசியப் பொருட்களின் விலை குறையும் எனச் சொல்லப்படுகிறது. பட்ஜெட் கார்களுக்கான வரியும் குறைக்கப்பட்டுள்ளது. இன்சூரன்ஸ் ப்ரீமியம்களுக்கு வரிகள் நீக்கப்பட்டுள்ளன. இந்த புதிய வரி முறை வரும் செப்டம்பர் 22ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே மதுரையில் நடைபெற்ற தமிழ்நாடு உணவு தானிய வியாபாரிகள் சங்கத்தின் 80வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய நிர்மலா சீதாராமன், செப்டம்பர் 22 முதல் நடைமுறைக்கு வரவிருக்கும் ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் மூலம் சுமார் ₹2 லட்சம் கோடி மக்களின் கைகளுக்குச் செல்லும் என்றும் இதன் மூலம் மக்கள் நுகர்வு அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார்.
நிர்மலா சீதாராமன் மேலும் பேசுகையில், “முன்பு நான்கு அடுக்குகளாக இருந்த ஜிஎஸ்டி இப்போது இரண்டு அடுக்குகளாக எளிதாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏழை, நடுத்தரக் குடும்பத்தினர் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அதிகம் பயனடைய வேண்டும் என்பதில் பிரதமர் மோடி உறுதியாக இருந்தார். இந்த ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் மூலம், மக்கள் நுகர்வு அதிகரிக்கும். வரி சீர்திருத்தம் காரணமாக ரூ.2 லட்சம் கோடி வரிப்பணம் அரசுக்கு வராமல், அது மீண்டும் மக்கள் கைகளுக்கே செல்கிறது. இதன் மூலமாகவே நுகர்வு அதிகரிக்கும் என்கிறேன்.
ஜிஎஸ்டி இரு அடுக்குகளாகக் குறைக்கப்படுவதால் பொதுமக்கள் அதிகம் வாங்கும் பொருட்களின் விலை குறையும். நான் இங்கு இன்னொரு உதாரணத்தையும் சொல்கிறேன். எடுத்துக்காட்டாகச் சோப்பு விற்பனை அதிகரிக்கிறது என வைத்துக் கொள்வோம். அப்போது உற்பத்தியாளர் உற்பத்தியை அதிகரிப்பார். உற்பத்தியை அதிகரிக்க அதிகப் பணியாளர்களை நியமிப்பதால், மக்களுக்கு வருமானம் கிடைக்கும். அவர்கள் வருமான வரி செலுத்துவதன் மூலம் அரசுக்கு மறைமுக வரிகளாக வருவாய் கிடைக்கிறது. இந்தச் சுழற்சி தொடரும்போது அது பொருளாதாரத்திற்கு நன்மை பயக்கும்.
எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் பொதுமக்கள் அதிகம் செலவழிக்கும்போது தேவை அதிகரிக்கும். தேவை அதிகரிக்கும்போது, உற்பத்தியும் பெருகும். இதனால் வேலைவாய்ப்புகள் உருவாகி, வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். 2017ல் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு 65 லட்சம் தொழில்முனைவோர் வரி செலுத்தினர். அந்த எண்ணிக்கை கடந்த 8 ஆண்டுகளில் 1.5 கோடியாக அதிகரித்துள்ளது. இதுவே ஜிஎஸ்டியின் வெற்றிக்கு ஒரு உதாரணம்” என்றார்.