ஏன்..? என்னாச்சு..? திருச்சி பிரச்சாரம்… போலீசார் வழக்குபதிவு.!!

நடிகருமான விஜய் 2026 சட்டமன்ற தேர்தலை மையமாக கொண்டு தனது அரசியல் செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறார்.

சமீபத்தில் மதுரையில் மாநாடு நடைபெற்று முடிந்த நிலையில், தனது முதற்கட்ட பிரசாரத்தை செப்டம்பர் 13 முதல் திருச்சியில் இருந்து தொடங்கி உள்ளார். இந்த பிரச்சாரத்திற்கு காவல்துறை சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பிரசாரத்தின்போது, காவல்துறையின் நிபந்தனைகள் எதுவுமே கடைபிடிக்க முடியாமல் போனது. இந்நிலையில் விதிகளை மீறியதாக தவெக நிர்வாகிகள் 7 பேர் மீது திருச்சி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் திருச்சியில் திறந்தவெளி வாகனத்தின் மேல் நின்று மட்டும் மக்களை சந்தித்து பிரசாரம் செய்வதற்கு காவல்துறை பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்திருந்தது. குறிப்பாக, விஜய்யின் வாகனத்தை பின்தொடர்ந்து, அதிகமான கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் வருவதற்கு அனுமதி இல்லை என்றும் தெரிவித்து இருந்தனர். ஆனால், அதிகப்படியான தொண்டர்கள் கூட்டம் வந்ததால் இந்த நிபந்தனையை பின்பற்ற முடியாமல் போனது. காவல்துறை அனுமதிக்கப்பட்டதை விட பல நூறு கார்கள் மற்றும் ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்கள் விஜய்யின் வாகனத்தை பின்தொடர்ந்தன.

இதனால், திருச்சி மாநகரின் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கட்டுக்கடங்காத கூட்டத்தால், விஜய்யின் பிரச்சார வாகனம் கூட மிக மெதுவாக ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. காலை 10 மணிக்கு ஏர்போர்ட்டில் இருந்து கிளம்பிய விஜய், மரக்கடை பகுதியை வந்து சேர்வதற்கு கிட்டத்தட்ட 5 மணி நேரம் ஆனது. ஆம்புலன்ஸ்கள் கூட செல்ல முடியாத அளவிற்கு போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனால் திட்டமிடப்பட்ட நேரத்தில் விஜய்யால் பிரச்சாரம் செய்ய முடியவில்லை. அரியலூர் பகுதியிலும் பிரச்சாரம் தாமதமாக நடைபெற்றது, பெரம்பலூர் பகுதியில் பிரச்சாரம் நடைபெறவே இல்லை.

திருச்சியில் போக்குவரத்து விதிமீறல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், திருச்சி மாவட்ட தவெக தலைவர் ஜெய், செயலாளர் வக்கீல் பிரபு மற்றும் பொருளாளர் ரமேஷ் குமார் உட்பட 7 நிர்வாகிகள் மீது கண்டோன்மென்ட் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் காவல்துறையின் இந்த நடவடிக்கை குறித்து, தவெக நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். “தங்கள் தலைவரை காண்பதற்காக திரண்ட மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்றும், இதில் தங்களின் தவறு ஏதுமில்லை” என்றும் அவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

முன்னதாக, காவல்துறை விதித்த 23 நிபந்தனைகளுக்கும் தவெக நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் காவல்துறை அனுமதி வாங்க கட்சியின் பொதுச்செயலாளர் திருச்சி வந்து இருந்த போது, காவல்துறை அவர் மீதும் வழக்கு பதிவு செய்து இருந்தது. இந்த சம்பவம் ஆளும் கட்சி, தவெகவின் வளர்ச்சியை தடுக்க நினைப்பதாக, தவெகவினர் மத்தியில் ஒரு விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றும், விதிமீறலில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.