புது தில்லி: ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு பிரதமர் ஷிகெரு இஷிபாவுடன் டோக்யோவில் இருந்து சென்டைக்கு புல்லட் ரயிலில் சென்றார்.
ஜப்பான் பிரதமருடன் புல்லட் ரயிலில் பயணித்த புகைப்படங்களை பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதுபோல, ஜப்பான் பிரதமர் இஷிபா, தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் புல்லட் ரயிலில் சென்டைக்குப் புறப்பட்டேன். இரவு பயணம் தொடங்கியது. நானும் அவருடன் ஒரே பெட்டியில் பயணித்து வருகிறோம் என்று புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.
சென்டை வந்து சேர்ந்த பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் ரயில்வேயில், பயிற்சி பெற்று வரும் இந்திய ரயில் ஓட்டுநர்களைச் சந்தித்துப் பேசினார்.
முன்னதாக, ஜப்பானின் டோக்யோவில் அமைந்துள்ள 16 மாகாண ஆளுநர்களை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். அப்போது, இந்தியா – ஜப்பான் இடையேயான நல்லுறவை மேம்படுத்தவது மற்றும் சர்வதேச கூட்டணி குறித்தும் பேசப்பட்டது.
இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக வியாழக்கிழமை புது தில்லியிலிருந்த ஜப்பான் புறப்பட்டுச் சென்ற பிரதமர் மோடி, அங்கு, 15-ஆவது இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சிமாநாட்டில் பங்கேற்றார்.
ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்டு, சீன அதிபா் ஷி ஜின்பிங் அழைப்பின் பேரில் தியான்ஜின் நகரில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் பயணமாக சனிக்கிழமை சீனா செல்லவிருக்கிறார் பிரதமர் மோடி.