ரயில் தண்டவாளத்தில் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து… அலறி கூச்சலிட்ட மாணவர்கள்..

டலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த பூவனூர் கிராமத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றிக் கொண்டு வேன் ஒன்று சென்றுகொண்டிருந்தது.

பூவனூர் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பள்ளி வேன் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தண்டவாளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 6 பள்ளி மாணவர்கள் படுகாயமடைந்தனர். மேலும் வேனின் உள்ளே இருந்த பள்ளி மாணவர்கள் காப்பாத்துங்க காப்பாத்துங்க அலறி கூச்சலிட்டனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் ஓடி வந்து வேனை தண்டவாளத்தில் தூக்கி அகற்றினர்.

பின்னர் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு படுகாயமடைந்த மாணவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த செய்தியை அறிந்த பிள்ளைகளின் பெற்றோர் பதறி அடித்துக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தனர்.

தண்டவாளத்தில் வேன் கவிழ்ந்த நேரத்தில் ரயில் ஏதும் வராததால் நல்வாய்ப்பாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த மாதம் கடலூரில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் அண்ணன், தங்கை உள்ளிட்ட 3 பள்ளி மாணவர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது..