கோவை: தமிழ், தமிழர்கள், தமிழ் கலாச்சாரம் என்று பொய் பேசும் திராவிட முன்னேற்ற கழகம், இந்த முறை அவர்களுடைய ஆதரவை சி.பி ராதாகிருஷ்ணனுக்கு வழங்கி தாங்கள் தமிழின் உண்மையான நண்பனா, இல்லையா என்பதை காட்ட வேண்டும் என்றும், தர்மங்களை சொல்லி தரக்கூடிய ராமாயணம், மகாபாரதம் போன்றவற்றை வன்னியரசு முதலில் படிக்க வேண்டும்.
யாரோ ஒருவர் கட்டுக்கதை பேசியதை வைத்து பேசுவது சரியல்ல என்றும் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சி.பி. ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டது குறித்து முதலமைச்சர் தெரிவித்த கருத்துக்கு, தமிழர் என்று கூறினால் தி.மு.க.வினரிடம் சென்று சான்றிதழ் வாங்கி வர வேண்டுமென்று நினைக்கிறார்களா.
தமிழகத்தை சார்ந்த ஒருவர், ஒரு தமிழர் துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படவுள்ள நிலையில் அவருக்கு முதல்வர் ஆதரவு தெரிவிக்காமல் இருக்கிறார். தமிழ், தமிழர்கள், தமிழ் கலாச்சாரம் என்று பொய் பேசும் திராவிட முன்னேற்ற கழகம் இந்த முறை அவர்களுடைய ஆதரவை சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வழங்குவதன் மூலாக உண்மையான தமிழ் நண்பனா இல்லையா என்பதை காட்ட முடியும்.
வரலாற்று சிறப்புமிக்க பெருமை தமிழகத்திற்கு கிடைத்துள்ளது. இதுபோன்ற தமிழருக்கு கிடைக்கக் கூடிய ஒரு வாய்ப்பை கொண்டாடாமல், பாராட்டு தெரிவிக்காமல் இதுபோன்ற ஒரு தருணத்தை வேண்டுமென்றே அரசியலுக்காக முகமூடி என்று சிறுமைப்படுத்த கூடிய வேலையை தமிழக முதலமைச்சர் செய்கிறார். தமிழ்நாட்டில் திமுக அரசியல் காரணங்களுக்காக இதுபோன்று செய்வது அவமானமானது.
திமுகவும், கூட்டணி கட்சியில் இருப்பவர்களும் இந்த அரசியலுக்கு துணை போகாமல் சிபி ராதாகிருஷ்ணனுக்கு கிடைத்திருக்கக்கூடிய இந்த வரலாற்று வாய்ப்பின் பெருமையில் பங்கு கொள்வோம் என்று ஆதரவு கொடுக்க வேண்டும்.
பீகாரில் ராகுல் காந்தியுடன் மு.க.ஸ்டாலின் சுற்றுப் பயணம் மேற்கொள்வது குறித்த கேள்விக்கு, வடமாநில தொழிலாளர்களுக்கு எதிராக மாநிலத்தின் முதலமைச்சரே ரயில் பயணங்கள் குறித்து கேவலமான வீடியோக்கள் பதிவிட்டது. அவர்களைப் பற்றி இழிவாக பேசுகின்ற அமைச்சர்கள் நிர்வாகிகளை எல்லாம் அரவணைப்பது என்று வட இந்திய மக்களை எல்லாம் அவமதிக்கின்ற வேலையை செய்து கொண்டிருக்கிறார்.
தமிழ்நாடு அரசியலுக்காக பல்வேறு மாநிலங்களில் வாழும் லட்சக்கணக்கான தமிழ் மக்களின் கௌரவத்தையும், பாதுகாப்பையும் கேள்விக்கு உள்ளாக்குகிறது. பீகார் மாநிலத்தைச் சார்ந்தவர்கள் இங்கு வாக்குரிமை பெறக்கூடாது என்றால் தமிழ்நாட்டை சார்ந்தவர்களுக்கு மற்ற மாநிலத்தில் கொடுக்கக் கூடாது என்று அங்கு இருக்கக்கூடிய அரசியல் கட்சிகள் பேசினால் எவ்வாறு இருக்கும். இது இந்தியாவின் ஒருமைப்பாட்டை சிதைக்கின்ற செயல்.
பொள்ளாச்சி அருகே பள்ளி ஆசிரியர்கள் மீது எழுந்த பாலியல் புகாரில் இரண்டு பேர் மீது போக்சோ வழக்கும், ஐந்து பேர் பணியிட மாற்றமும் செய்யப்பட்டுள்ளனர். திராவிட மாடல் எனும் திமுக அரசாங்கத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பட்டியல் இனத்தை சார்ந்தவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. பள்ளிகளில் குழந்தைகளுக்கும் தற்பொழுது பாதுகாப்பு இல்லை என்ற சூழலுக்கு நாம் சென்று கொண்டிருக்கிறோம். கற்பனையான உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்காமல் முதலமைச்சர் உண்மையிலேயே மாணவிகளின் நலன் பற்றி தீவிரமாக யோசிக்க வேண்டும்.
ராமர் குறித்து வன்னியரசு பேசிய கருத்துக்கு பதில் அளித்த அவர், வன்னியரசு முதலில் உண்மையான ராமாயணத்தை படிக்க வேண்டும். கற்பனையாக அவர்கள் பேசுவதற்கு நாங்கள் எதுவும் செய்ய முடியாது. பல்வேறு மக்களுக்கும் வாழ்க்கையின் முக்கியமான தர்மங்களை சொல்லி தரக்கூடிய ராமாயணம், மகாபாரதம் போன்ற உண்மை கதைகளை அவர்கள் படிக்க வேண்டும். யாரோ ஒருவர் கட்டுக்கதை பேசியதை வைத்து பேசுவது சரியல்ல.
இந்த நாட்டில் சனாதன தர்மத்தை அழிப்பதற்காக பல்வேறு திசைகளில் இருந்து வந்து தர்மத்தை அழிக்க முயற்சி செய்தார்கள். ஆனால் அவை அனைத்தையும் மீறி சனாதன தர்மம் எனப்படும் இந்து தர்மம் நிலை பெற்று இருக்கிறது. அரசியல் கட்சி தலைவர்கள் எல்லாம் நினைத்தால் இதனை அழித்து விட முடியாது. ஒரு மனிதனின் வாழ்க்கையை பூரணமாக வாழ்வதற்கு உதவி புரியும் அமைதியான தர்மம் உலகிலேயே இருக்க முடியும் என்றால் அது சனாதன தர்மம் தான்.
இந்து தர்மத்தை அழிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், பேசுபவர்கள் எல்லாம் அழிந்து செல்கிறார்கள் என்று வரலாறு கூறும். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கக்கூடிய கூட்டணி கட்சித் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்துவது தொகுதி பங்கீடு விஷயங்கள் எல்லாம் டெல்லி தலைமையும் இங்கு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை வகிக்கும் அதிமுகவும் சேர்ந்து தான் முடிவு எடுக்கும் என்றார்..