பட்டை நாமம்.. விலைமாதர் குறித்து பொன்முடி சர்ச்சை பேச்சு… வீடியோ ஆதாரம் கேட்டு காவல்துறைக்கு சென்னை ஹைகோர்ட் உத்தரவு.!

சென்னை: சைவம், வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து இழிவாக பேசிய, முன்னாள் அமைச்சர் பொன்முடியின் முழு பேச்சு அடங்கிய வீடியோவை தாக்கல் செய்ய, காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்த விசாரணையையும் வருகிற 28ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் திருவாரூர் கே.தங்கராசு நூற்றாண்டு விழா சென்னையில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்றது. அதில் பங்கேற்ற அமைச்சர் பொன்முடி, பெண்களை இழிவுபடுத்தும் வகையில் சில கருத்துகளை பேசியிருந்தார்..

இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் பரவி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. யாரும் எதிர்பாராத வகையில் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழியிடம் இருந்து கண்டனக் குரல் ஒலித்தது.

“எந்தக் காரணத்துக்காகப் பேசப்பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கவை என்றார் கனிமொழி. அதேபோல, பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.

திமுக துணை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து பொன்முடியை நீக்கினார் முதலமைச்சர் ஸ்டாலின். வழக்கமாக பதவி பறிப்பு போன்ற அறிவிப்புகளை பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிடும் நிலையில், முதலமைச்சரே நேரடியாக அறிவித்திருந்தார்..

இதையடுத்து, முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த அமைச்சர் பொன்முடி சர்ச்சை கருத்து தொடர்பாக விளக்கம் அளித்தார். பின்னர் பொன்முடி தன்னுடைய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்திருந்தார்..

நீண்ட காலம் பொது வாழ்க்கையில் உள்ள எனக்கு இதுபோன்ற தடுமாற்றம் ஏற்பட்டது குறித்து நான் மிகவும் வருந்துகிறேன். பலருடைய மனதைப் புண்படுத்தும் வகையில் இப்பேச்சு அமைந்து விட்டது குறித்தும், அவர்கள் தலைகுனியும் சூழல் ஏற்பட்டது குறித்தும் நான் மிகவும் மனம் வருந்துகிறேன்” என்று தெரிவித்திருந்தார்.

ஆனால், பொன்முடியின் பேச்சு, வெறுப்பு பேச்சு வரம்பிற்குள் வருவதாக கூறி, தாமாக முன்வந்து, சென்னை ஹைகோர்ட் வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

இந்த வழக்கு, நீதிபதி என்.சதீஷ்குமார் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ”இந்த விவகாரம் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக அளிக்கப்பட்ட, 100க்கும் மேற்பட்ட புகார்கள் மீது விசாரணை நடத்தி, முகாந்திரம் இல்லை என்று காவல் துறையால் முடித்து வைக்கப்பட்டது,” என கூறி, அது தொடர்பான விபரங்களை தாக்கல் செய்தார்.

அப்போது அதை படித்து பார்த்த நீதிபதி, ‘புகார்களில் முகாந்திரம் இல்லையென்று எந்த அடிப்படையில் காவல் துறை முடிவுக்கு வந்தது? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், ”கடந்த 1972ல் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், அப்போதைய சமூக சீர்திருத்தவாதி தெரிவித்த கருத்துகளையே, முன்னாள் அமைச்சரும் குறிப்பிட்டு பேசினார். அது, அவரின் கருத்துகள் அல்ல. அதுதொடர்பான வீடியோவை முழுமையாக பார்த்தால், அந்த விபரங்கள் தெரியவரும்,” என்றார்.

இதையடுத்து நீதிபதி, “பொன்முடியின் முழு பேச்சு குறித்த வீடியோவையும், கடந்த 1972ம் ஆண்டு, அப்போதைய சமூக சீர்திருத்தவாதி பேசிய பேச்சுகளின் விபரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும்” என காவல் துறைக்கு உத்தரவிட்டு, வழக்கை ஆகஸ்ட் 28ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.